×

வன உயிரின நலவாரிய குழு: வைகோ வேண்டுகோள்

சென்னை: தமிழ்நாடு வன உயிரின நலவாரியக் குழுவை விரைந்து அமைத்திட வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் வனம் சார்ந்த பகுதிகளில் நீர்த்தேக்கம் மற்றும் குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிட தமிழ்நாடு முதல்வரைத் தலைவராகக் கொண்ட தமிழ்நாடு வன உயிரின நலக்குழுவின் தடையின்மைச் சான்று அவசியமாகும். தென்காசி மாவட்டம், கீழப்பாவூர், கடையம் ஒன்றியப் பகுதிகளுக்கு வேளாண்மை மற்றும் குடிநீர் ஆதாரத்திற்காக அப்பகுதி மக்களால் பன்னெடுங்காலமாக வலியுறுத்தி வந்த ராமநதி-ஜம்புநதி இணைப்புக் கால்வாய்த் திட்டம், திமுக அரசின் விரைவான செயல்பாட்டின் காரணமாக நிலம் கையகப்படுத்துதல் நிலையை அடைந்துள்ளது.

மேலும் இத்திட்டத்தில் நிலம் கையகப்படுத்துதல் பணிகளுக்காக அரசுப் பணியாளர்கள் நியமனமும், அவர்களுக்கான ஊதியம் வழங்குவதற்கான ஆணை மற்றும் ஓராண்டு திட்டத்திற்கான கால நீட்டிப்பும் வழங்கப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே அரசு மீதான நன்மதிப்பை உயர்த்தி உள்ளது. இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்திட மேலே குறிப்பிட்டவாறு வனம் மற்றும் சுற்றுச் சூழல் துறை விதிகள் படி, வன உயிரின நலக்குழுவின் தடையின்மைச் சான்று அவசியமாகிறது. வனம் சார்ந்த பகுதிகளில் மேற்கொள்ளப்படும் அனைத்துத் திட்டங்களுக்கும் இதே நடைமுறைதான் பின்பற்றப்படுகிறது.

எனவே, வன உயிரின நலக் குழுவிற்கு, வனம் மற்றும் சுற்றுச் சூழல் துறை விதிகளின் படி தேவையான தகுதியான உறுப்பினர்களை நியமித்து, ராமநதி-ஜம்புநதி இணைப்புக் கால்வாய்த் திட்டம் உள்ளிட்ட அரசுத் திட்டங்களுக்கு தடையின்மைச் சான்று வழங்கிட வேண்டும். இதுகுறித்து தமிழ்நாடு முதல்வருக்கு கடந்த 10ம் தேதி கடிதம் அனுப்பியுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Wildlife Welfare Committee ,Waiko , Wildlife Welfare Committee: Waiko Request
× RELATED எடப்பாடி, ஓபிஎஸ், செல்வப்பெருந்தகை,...