×

எடப்பாடி, ஓபிஎஸ், செல்வப்பெருந்தகை, ராமதாஸ், வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாக்களிப்பு: மக்களுடன் வரிசையில் நின்று ஜனநாயக கடமையாற்றினர்

சென்னை: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு எடப்பாடி, ஓபிஎஸ், செல்வப்பெருந்தகை, ராமதாஸ், வைகோ உள்ளிட்ட தலைவர்கள் மக்களோடு வரிசையில் நின்று வாக்களித்தனர். தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகள், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி என 40 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நேற்று நடந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மிக விறுவிறுப்பாக நடந்தது. வெயிலையும் பொருட்படுத்தாமல் வந்து மக்கள் வாக்களித்த காட்சியை காண முடிந்தது. இதே போல அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் சொந்த ஊரில் நேற்று காலை முதல் வாக்களித்தனர்.

தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள எஸ்ஐஇடி கல்லூரியில் காலையில் வாக்களித்தார். திமுக இளைஞர் அணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினர் வாக்களித்தனர். திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி மயிலாப்பூரில் உள்ள செயின்ட் எப்பாஸ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் வாக்களித்தார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஸ்ரீபெரும்புதூர் தொகுதி மணிமங்கலம், அரசு இசேவை மையம், மேற்கு முகம், கிழக்கு பகுதி வாக்குச்சாவடி 272ல் தனது வாக்கை பதிவு செய்தார். மதிமுக பொது செயலாளர் வைகோ கலிங்கப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் வாக்களித்தார்.

அவருடன் அவரது மகனும், திருச்சி தொகுதி வேட்பாளருமான துரை வைகோவும் வாக்களித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அங்கனூர் கிராமம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்களித்தார். மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ அரும்பாக்கம் ஜெகானந்தா நகர் மெயின் ரோடு தெருவில் உள்ள குட் ஹோப் பள்ளிக்கூடத்தில் தனது வாக்கை பதிவு செய்தார். தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சிமுருகன் தி.நகரிலும், தமிழ்நாடு விவசாயிகள், தொழிலாளர் கட்சி தலைவரும், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவருமான பொன்குமார் கே.கே.நகரில் உள்ள பத்மா சேஷாத்திரி பள்ளியிலும் வாக்களித்தனர்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன் திருத்துறைப்பூண்டி வேளூர் தொடக்கப்பள்ளியிலும், மார்க்சிஸ்ட் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சிதம்பரத்தில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியிலும், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அடையாறு காமராஜர் அவனெ்யூ அரசு உயர்நிலைப்பள்ளியிலும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தேனாம்பேட்டை எல்டாம்ஸ் ரோட்டில் உள்ள சென்னை உயர்நிலைப்பள்ளியிலும் வாக்கு பதிவு செய்தனர். தமிழ்நாடு மாற்று திறனாளிகள் முன்னேற்ற சங்க தலைவரும், தமிழ்நாடு அரசு மாற்றுதிறனாளிகள் நலவாரிய உறுப்பினருமான ரெ.தங்கம் புதுக்கோட்டை கீழாத்தூர் நடுநிலை பள்ளியில் வாக்களித்தார்.

எடப்பாடி பழனிசாமி: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சிலுவம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் வாக்களித்தார். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், விஜயகாந்த் மகன்கள் விருதுநகர் தொகுதி வேட்பாளர் விஜய் பிரபாகரன், நடிகர் சண்முகபாண்டியன் ஆகியோர் சென்னை சாலிகிராமம் கே.கே.சாலையில் உள்ள காவேரி மேல்நிலைப்பள்ளியில் வாக்களித்தனர். அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள எஸ்டிபிஐ கட்சி தலைவர் முகமது முபாரக் நெல்லை மேலப்பாளையம் கணேசபுரத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

ஓ.பன்னீர் செல்வம்: பாஜ தலைவர் அண்ணாமலை கரூர் சூடாமணி ஊத்துப்பட்டி தொடக்கப்பள்ளியிலும், ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் கோயம்பேட்டிலும், பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பெரிய குளத்தில் உள்ள சவன்த் டே அட்வென்டிஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும் வாக்களித்தனர். பாமக நிறுவனர் ராமதாஸ் தனது சொந்த ஊரான திண்டிவனம் மரகதாம்பிகை உயர்நிலைப்பள்ளியில் வாக்களித்தார். அதே பள்ளியில் பாமக தலைவர் அன்புமணியும் வாக்களித்தார். தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆழ்வார்பேட்டை பீமண்ண கார்டன் தெரு சென்னை மேல்நிலைப்பள்ளியிலும் அமமுக பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் அடையாறு தாமோதரபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியிலும் வாக்களித்தனர்.

சீமான்: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வளசரவாக்கம் அஷ்டலட்சுமி நகர் வேளாங்கண்ணி பள்ளியில் வாக்களித்தார். இதே போல பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் காலையிலேயே நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.

The post எடப்பாடி, ஓபிஎஸ், செல்வப்பெருந்தகை, ராமதாஸ், வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாக்களிப்பு: மக்களுடன் வரிசையில் நின்று ஜனநாயக கடமையாற்றினர் appeared first on Dinakaran.

Tags : Edappadi ,OPS ,Ramadas ,Vigo ,Democrats ,Chennai ,Selwappanthakai ,Wiko ,Tamil Nadu ,Puducherry ,Wealthy ,Waiko ,
× RELATED அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள்: எடப்பாடி வேண்டுகோள்