×

மாங்கரை செக்போஸ்டில் முறைகேடாக செங்கல் லோடு கடத்தல்

கோவை : கோவை ஆனைகட்டி ரோடு மாங்கரை, நஞ்சுண்டாபுரம், சோமையனூர் உட்பட பல்வேறு பகுதியில் செங்கல் சூளைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
செங்கல் எடுக்க, அதை சப்ளை செய்ய கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆனால், முறைகேடாக செங்கல் தயாரித்து செக்ேபாஸ்ட் வழியாக நேற்று முன் தினம் இரவு 10க்கும் மேற்பட்ட லாரிகள் செங்கல் லோடு கடத்தப்பட்டது.

செக்போஸ்டில் வனத்துறையினருக்கு சிலர் பணம் கொடுத்து விட்டு செங்கல் கடத்தி வருவதாக தகவல் வெளியானது. செங்கல் லோடுடன், லாரிகள் வரிசையாக வனப்பகுதியில் இருந்து வெளியே செல்வதும், செக்போஸ்ட்டில் வெளி ஆட்கள் வருகிறார்களா? என ஒருவர் கவனிக்கும் வீடியோ வெளியானது. இது தொடர்பாக, மாவட்ட நிர்வாகம், கனிம வளத்துறை, தடாகம் போலீசாருக்கு புகார் தரப்பட்டது.

அதன் பேரில் போலீசார் நேற்று விசாரணை நடத்தினர். ஆனைகட்டி மெயின் ரோட்டில் ஆர்நாடு பகுதி மற்றும் வனத்தை ஒட்டியுள்ள பட்டா நிலங்களில் 6 செங்கல் சூளைகள் அனுமதியின்றி இயங்கி வருவதாக தெரிகிறது. இந்த செங்கல் சூளைகளில் முறைகேடாக செங்கல் உற்பத்தி தொடர்ந்து நடப்பதாகவும், இரவு 8 மணி முதல் அதிகாலை வரை செங்கல் லோடு ஏற்றி விற்பனைக்கு அனுப்புவதாக தகவல் வெளியானது. இரவில் முறைகேடாக செங்கல் கடத்தி செல்வது தொடர்பாக தடாகம் போலீசாருக்கு தகவல் தரப்பட்டது.

ஆனால், போலீசார் லாரிகளை பிடிக்காமல் விட்டு விட்டதாக தெரிகிறது. தினமும் கேரள மாநிலம்  ஆனைகட்டியில் இருந்து காரமடைக்கு ஜல்லி கற்கள் எடுக்க லாரிகள் வந்து செல்கிறது. இந்த லாரிகளை செங்கல் கடத்த சிலர் பயன்படுத்தி வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாங்கரை பகுதி மக்கள் கூறுகையில்,‘‘போலீஸ், வனத்துறை செக்போஸ்ட்டில் செங்கல் லோடு என தெரிந்தும் கண்டுகொள்ளாமல் வாகனத்தை விட்டு விடுகிறார்கள். செக்போஸ்ட்டில் பிடித்து நடவடிக்கை எடுப்பதில்லை.

முறைகேடாக செம்மண் எடுப்பதும், செங்கல் சூளை இயக்குவதும் நடக்கிறது. எந்த அதிகாரிகளும் இதை கண்டுகொள்வதில்லை. மோசடி கும்பலுக்கு துணை போகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தால் தான் இந்த முறைகேடுகளை தடுக்க முடியும்’’ என்றனர்.

கேமரா எல்லாம் வேஸ்ட்

கோவை மாவட்டத்தில் கனிம பொருட்கள் கடத்தல் தடுக்க 11 செக்போஸ்ட்களில் கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டுள்ளது. இதில், வீடியோ பதிவுகளை மாவட்ட நிர்வாகத்தினர் குறிப்பாக கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர், கனிம வளத்துறை உதவி இயக்குநர் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், இதுவரை கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளின் படி குற்றவாளிகளை பிடிக்க அதிகாரிகள் முன் வரவில்லை. இப்போது, கண்காணிப்பு கேமரா வீடியோ பதிவு அனுப்பி இதில் தொடர்புடைய நபர்களை பிடிக்க செங்கல் சூளைகளை முடக்கவேண்டும் என சூழல் ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Tags : Mangarai , Coimbatore: Brick kilns have been banned in various parts of Coimbatore including Anaikatti Road, Mangarai, Nanchundapuram and Somayanur.
× RELATED கோவை நிஃபா வைரஸ்: கேரள எல்லையில் கண்காணிப்பு