×

சிதம்பரம் கோயில் விவகாரம் குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

சென்னை: சென்னை வடபழனி முருகன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் இலவச திருமணத்தை அமைச்சர் சேகர்பாபு நடத்திவைத்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி:  திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு இந்து சமய அறநிலையத்துறையில் வரலாறு காணத அளவிற்கு பல்வேறு பணிகள் மற்றும் திட்டங்கள் முதலமைச்சர் வழிகாட்டுதல்களோடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு இந்து சமய அறநிலையத்துறையின் பொற்காலமாக பார்க்கப்படுகிறது. சட்டமன்றத்தில் அறிவித்தபடி மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு வடபழனியில் மாற்றுத்திறனாளிகளுக்கு திருமணம் நடைபெற்றது. கடந்த ஆட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு கோயில்களில் இலவச திருமணம் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்த போது ஏற்கவில்லை.

திமுக அரசு பொறுப்பேற்றதும் மாற்றுத்திறனாளிகளுக்கு கோயில்களில் இலவச திருமணம் திட்டம் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. சிதம்பரம் கோயில் குறித்து சட்ட வல்லுனர்களோடு ஆலோசனை நடத்தி வருகிறோம். இணை ஆணையர் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விசாரணை அறிக்கை பெற்றதும் இந்த பிரச்னை குறித்து முதலமைச்சர் மேற்பார்வையில் ஆலோசனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். தேர் திருவிழாவில் சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. வரும் காலங்களில் அசம்பாவிதங்கள் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ளப்படும். முத்தமிழறிஞரின் நினைவு நாளை முன்னிட்டு தொடங்கப்பட்ட 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 80 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.  இவ்வாறு கூறினார்.

Tags : Minister ,Sakerbabu , Consultation with legal experts on Chidambaram temple issue: Interview with Minister Sekarbabu
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...