×

ரஷ்யா - உக்ரைன் போரில் நேட்டோ படைகள் தலையிட்டால் 3வது உலகப்போர் வெடிக்கும் : அமெரிக்க அதிபர் ஜோபிடன் எச்சரிக்கை!!

வாஷிங்டன் : ரஷ்யா - உக்ரைன் இடையேயான போரில் நேட்டோ படைகள் குறுக்கிட்டால் அது 3வது உலக போருக்கு வழி வகுத்துவிடும் என்று அமெரிக்க அதிபர் ஜோபிடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா 17 நாட்களாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனில் ஒவ்வொரு நகரமாக கைப்பற்றி வரும் ரஷ்ய படைகள், தலைநகர் கீவ்வை தன் வசம் ஆக்குவதில் தீவிரம் காட்டி வருகின்றன. தென் கிழக்கு நகரமான மரியுப்போலிலும் ரஷ்ய விமானங்களும் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். ரஷ்யாவை எதிர்த்து போரிட உக்ரைன் ராணுவத்திற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆயுதம் மற்றும் நிதியுதவி அளித்து வருகின்றன.

ஆனால் உக்ரைனுக்கு ஆதரவாக இதுவரை நேட்டோ அமைப்பு நேரடியாக போரில் குதிக்கவில்லை. இந்த நிலையில் அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி.யில் பேசிய ஜோபிடன், நேட்டோ படைகள் மற்றும் ரஷ்யாவிற்கு எதிரே நேரடி போர் ஏற்பட்டால் அது 3வது போருக்கு வழிவகுப்பது போல் ஆகிவிடும் என்று தெரிவித்தார். 3வது உலக போர் போன்ற அபாயகரமான சூழலை தவிர்க்கவே நேட்டோ விரும்புவதாக கூறிய பிடன், அடைக்கலம் தேடி அமெரிக்கா வரும் உக்ரைன் குடிமக்களை திறந்த மனதுடன் வரவேற்பதாக குறிப்பிட்டார். நேட்டோ உறுப்பு நாடுகளில் ஒவ்வொரு அங்குலத்தை இரும்புகரம் கொண்டு பாதுகாப்போம் என்றும் அமெரிக்க அதிபர் ஜோபிடன் தெரிவித்துள்ளார். 


Tags : 3rd World War Explosion ,NATO ,Russia ,Ukraine ,Jobidan , Russia, Ukraine, NATO forces
× RELATED ரஷ்ய போலீசார் தேடப்படுவோர் பட்டியலில் உக்ரைன் அதிபர்!