×

கடலூர் அருகே நில ஆக்கிரமிப்பு: நிலத்தை மீட்டு வீட்டுமனைப் பட்டாவாக மாற்ற அப்பகுதி மக்கள் கண்ணீர் மல்க கோரிக்கை..!!

கடலூர்: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்பட்ட இடத்தை மீட்டுத் தருமாறு அப்பகுதி மக்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே வானமாதேவி என்ற கிராமத்தில் நில உச்சவரம்பு சட்டத்தின் மூலம் இலவசமாக வழங்கப்பட்ட அரசு ஆதிதிராவிடர் குடியிருப்பு புதுகாலணி உள்ளது. இந்தக் குடியிருப்பு வாசிகளின் நலனுக்காக நூலகம், விளையாட்டு மைதானம், கோயில் போன்றவைகள் அமைக்க அரசு நிலம் ஒதுக்கியது. இந்நிலையில், அந்த நிலங்களை அதே பகுதியைச் சேர்ந்த குடியிருப்புகளுக்குச் சொந்தமில்லாத சிலர் ஆக்கிரமிப்பு செய்து பலரிடம் விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், அப்பகுதி மக்கள் பயன்படுத்தும் குளம் மற்றும் சுடுகாடு போன்றவை உட்பட ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும், இது தங்களுக்குச் சொந்தமான இடம், இங்கு வசிக்கக் கூடாது என குடியிருப்பு வாசிகளை மிரட்டுவதாகவும் புகார் தெரிவித்துள்ளனர். இதற்கு பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகளும் உடந்தையாக இருந்ததாகக் குடியிருப்பு வாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கு மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்தனர். இந்நிலையில், அரசு உரிய நடவடிக்கை எடுத்து தங்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தை மீட்டு வீட்டுமனைப் பட்டாவாக மாற்றித் தருமாறும், தங்கள் வாழ்வாதாரத்திற்கு வழி செய்யுமாறும் அப்பகுதி மக்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Cadalore , Cuddalore, land occupation, patta, people, demand
× RELATED தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வழக்கில்...