திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோயில் வைகுந்த ஏகாதசி விழாவில் பகல்பத்து 6ம் நாளான இன்று முத்துக்கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள் அர்ச்சுன மண்படத்தில் எழுந்தருளினார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பூலோக வைகுண்டம் என போற்றப்படுவதும், 108 வைணவ தலங்களில் முதன்மையானதும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 19ம் தேதி துவங்கியது. தொடர்ந்து 20ம் தேதி முதல் பகல்பத்து உற்சவம் நடந்து வருகிறது. பகல்பத்து உற்சவத்தின் 6ம் திருநாள் வெகு விமரிசையாக இன்று நடைபெற்று வருகிறது.
இதையொட்டி காலை 6.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்துக்கு திருநாராயணன் முத்துக் கொண்டை சாற்றி, மார்பில் சிகப்புக் கல் சூர்ய பதக்கம், அதன் மேல் ஸ்ரீ மகாலட்சுமி பதக்கம், சந்திர ஹாரம், சிகப்புக் கல் அடுக்கு பதக்கங்கள், தங்கப் பூண் பவள மாலை, 2 வடமுத்து மாலை, மரகத பச்சை கிளி மாலை, வெண் பட்டு அணிந்து , பின் சேவையாக பங்குனி உத்திர பதக்கம, புஜ கீர்த்தி அணிந்து பல்லக்கில் திருவீதி புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து அர்ச்சுன மண்டபத்தில் ஆழ்வார்கள் முன்னிலையில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். நம்பெருமாளை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசித்தனர்.
பகல்பத்தின் கடைசி நாளான வரும் 29ம் தேதி நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் காட்சி தருகிறார். அதனைத் தொடர்ந்து ராப்பத்து விழாவின் முதல் நாளான 30ம் தேதி முக்கிய நிகழ்வான பரமபதவாசல் திறப்பு நடைபெறவுள்ளது. 9ம் தேதி இயற்பா சாற்றுமறையுடன் விழா நிறைவடைகிறது.
