×

எங்களை உயிருடன் பார்ப்பது இதுவே கடைசியாக இருக்கலாம்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உருக்கம்

உக்ரைன் வான் பரப்பை ‘விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதி’ என அறிவிக்க வேண்டுமென உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேட்டோ மற்றும் அமெரிக்காவிடம் தொடர்ந்து வலியுறுத்துகிறார். இவ்வாறு அறிவிப்பதன் மூலம், உக்ரைன் மீது பறக்கும் ரஷ்ய போர் விமானங்களை நேட்டோ படையும், அமெரிக்க படைகளும் சுட்டு வீழ்த்த முடியும். ஆனால், இது ரஷ்யாவுக்கு எதிராக நேரடி போரில் களமிறங்குவது போலாகும் என்பதால் நேட்டோவும், அமெரிக்காவும் தயங்குகின்றன. இதனால் விரக்தி அடைந்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனிப்பட்ட முறையில் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வீடியோ தகவல் ஒன்றை அனுப்பினார்.

அதில் ஜெலன்ஸ்கி, ‘‘இதுவே நீங்கள் என்னை உயிருடன் பார்க்கும் கடைசி தருணமாகக் கூட இருக்கலாம். உக்ரைன் வான் பரப்பை விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பதன் மூலமும், எங்களுக்கு அதிக போர் விமானங்களை வழங்குவதன் மூலமும் உக்ரைன் தன்னை தற்காத்துக் கொள்ள முடியும். அதற்கு உதவ வேண்டும்’’ என்றார். ஐரோப்பிய நட்பு நாடுகள் உக்ரைனுக்கு மிக் ரக விமானங்களை வழங்க தயாராக உள்ளன. ஆனால் அந்த விமானங்களுக்கு மாற்றாக அமெரிக்காவின் எப்-16 ரக போர் விமானங்கள் விநியோகத்தை ஐரோப்பிய நாடுகள் எதிர்பார்த்துள்ளன. இதனை விநியோகிக்காமல் அமெரிக்கா தொடர்ந்து தாமதித்து வருவது குறிப்பிடத்தக்கது.

* இந்த படை போதுமா இன்னும் வேணுமா…?
உக்ரைனில் நாளுக்குநாள் பலி எண்ணிக்கை அதிகரித்த போதிலும், தாய்நாட்டை பாதுகாக்க அந்நாட்டு மக்கள் பலர் ராணுவத்தில் ஆர்வத்துடன் சேர்ந்து வருகின்றனர். 18 முதல் 60 வயதுடைய ஆண்கள் நாட்டை விட்டு வெளியேற உக்ரைன் அரசு தடை விதித்துள்ளது. அப்படியிருக்கையில், பல இளைஞர்கள் ராணுவத்தில் சேர வரிசையில் காத்திருக்கிறார்கள். அவர்கள் கூறுகையில், ‘‘நாங்கள் ஏன் நாட்டில் இருக்க வேண்டும் என்பதை நாங்கள் அறிவோம். ரஷ்ய படையை எதிர்த்து போராடி வரும் எங்கள் சகோதரர்களுக்கு துணையாக நாங்களும் போராடுவோம்’’ என்றனர். இதுதவிர, இங்கிலாந்து உள்ளிட்ட பிற நாட்டை சேர்ந்தவர்களும் தாமாக முன்வந்து உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்து ரஷ்யாவுக்கு எதிராக போராடுவது குறிப்பிடத்தக்கது.

* விசா, மாஸ்டர் கார்டு செல்லாது
சர்வதேச நிறுவனங்கள் ரஷ்யாவுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், டெபிட், கிரெடிட் கார்டுகளை வழங்கும் விசா, மாஸ்டர் கார்டுகள் ரஷ்யாவில் இனி தங்களின் வர்த்தக செயல்பாடுகளை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளன. இதன் காரணமாக, ரஷ்ய வங்கிகள் மூலம் வழங்கப்பட்ட மாஸ்டர், விசா கார்டுகள் செல்லாது. மேலும் ரஷ்ய வங்கிகள் வெளிநாட்டில் வழங்கிய மாஸ்டர் கார்டுகளும் பயன்படுத்த முடியாது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது ரஷ்ய பொருளாதாரத்தை மேலும் பாதிக்கும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

* ‘என்ன அழகிய உலகம் இது’வைரலாகும் பியானோ இசை
உக்ரைனின் மேற்கு பகுதியில் உள்ள லிவ் நகரத்தை மட்டும் ரஷ்ய படைகள் இன்னும் பெரியளவில் தாக்காமல் விட்டு வைத்துள்ளது. இங்குள்ள ரயில் நிலையத்தின் மூலமாகவே, கார்கிவ், கீவ் உள்ளிட்ட மற்ற நகரங்களை சேர்ந்த மக்கள், அண்டை நாடுகளுக்கு ரயில்களில் தப்பிச் செல்கின்றனர். இந்த பரபரப்புக்கும் இடையே,  இந்த ரயில் நிலையத்துக்கு வந்த அழகிய இளம்பெண் ஒருவர், தனது நாட்டின் நிலையை நினைத்து,  ‘என்ன அழகிய உலகம் இது’ என்ற பாடலை பியானோவில் மனம் உருகும் வகையில் வாசித்துள்ளார். இந்த வீடியோ உலகளவில் வைரலாகி வருகிறது.

* இஸ்ரேல் பிரதமர் திடீர் பயணம்
உக்ரைனில் போர் நடந்து வரும் சூழலில், இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட் நேற்று முன் தினம் திடீர் பயணமாக ரஷ்யா சென்றார். அமெரிக்க அதிபர் பைடன் நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் இப்பயணம் மேற்கொள்ளப்பட்டதாக பென்னட் அலுவலகம் தெரிவித்தது. மாஸ்கோ சென்ற பென்னட், ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து உக்ரைன் போர் விவகாரம் தொடர்பாக 3 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் தொலைபேசி மூலம் பேசினார். ரஷ்யாவிலிருந்து புறப்பட்ட அவர் ஜெர்மனி சென்று அந்நாட்டு அதிபர் ஓலாப் ஸ்கோல்ஸ்சை சந்தித்து பேசினார். ரஷ்யா, உக்ரைன் இரு நாடுகளுடனும் நட்பாக உள்ள நாடுகளில் இஸ்ரேலும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

* 500 கிலோ வெடிகுண்டால் குலுங்கியது செர்னிஹிவ்
தலைநகர் கீவ்வின் வடக்கில் அமைந்துள்ள செர்னிஹிவ் நகரில் ரஷ்ய ராணுவம் சக்திவாய்ந்த வெடிகுண்டை குடியிருப்பு பகுதியில் வீசி தாக்குதல் நடத்திய புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. எப்ஏபி-500 எனப்படும் 500 கிலோ எடை கொண்ட வெடிகுண்டை போர் விமானம் மூலமாக வீசியது. பொதுவாக, இந்த வகை வெடிகுண்டுகள் ராணுவ தொழிற்சாலைகள் மற்றும் ராணுவ கட்டிட கட்டமைப்புகள் மீது வீசப்படும். ஆனால், அதை குடியிருப்புகள் மீது ரஷ்ய ராணுவம் வீசி தாக்குதல் நடத்தி உள்ளது. இதில் பல குடியிருப்புகள் இடிந்து நாசமாகி உள்ளன. 17 பொதுமக்கள் பலியானதாக கூறப்படுகிறது. வானில் பறந்த ரஷ்ய போர் விமானத்தை உக்ரைன் ராணுவம் சுட்டு வீழ்த்திய வீடியோ காட்சிகளை வெளியிட்ட நிலையில், ரஷ்யாவின் இந்த பயங்கர தாக்குதல் நடந்துள்ளது.

Tags : President ,Zhelensky , This may be the last thing that will see us alive: Ukrainian President Zhelensky melts
× RELATED காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன...