×

திருப்போரூர் ஒன்றியத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை அதிகாரிகள் குழு ஆய்வு

திருப்போரூர்: கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்த கனமழையின் காரணமாக சென்னைப் புறநகர் பகுதிகளான தாம்பரம், முடிச்சூர், வரதராஜபுரம், பொன்மார், சேலையூர், வண்டலூர், தாழம்பூர், செம்மஞ்சேரி, சோழிங்க நல்லூர், தையூர், கேளம்பாக்கம், ஓ.எம்.ஆர். சாலை போன்ற பகுதிகள் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. எதிர்காலத்தில் இதுபோல் அதிக மழை மற்றும் வெள்ளம் ஏற்படும் காலங்களில் முன்னெச்சரிக்கையாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் சிறப்புக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழுவில் சி.எம்.டி.ஏ, மாநகராட்சி, வனத்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் இடம் பெற்றிருந்தனர்.

இந்நிலையில் சென்னைப் புறநகர் பகுதிகளில் மழைக்காலங்களில் பாதிப்புகள் ஏற்படும் இடங்களை கண்டறியும் வகையில் இக்குழுவினர் கடந்த இரண்டு நாட்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். கடந்த 5ம் தேதி பல்லாவரம் பெரிய ஏரி, ஜி.எஸ்.டி. சாலை, சேலையூர் ஏரி, சிட்லபாக்கம் ஏரி, செம்பாக்கம், ஏரி, நன்மங்கலம் ஏரி, கீழ்க்கட்டளை ஏரி, நாராயணபுரம் ஏரி, ராஜகீழ்பாக்கம் ஏரி, மாடம்பாக்கம், ஏரி, ஒட்டியம்பாக்கம் ஏரி ஆகியவற்றை பார்வையிட்டனர். 2ஆவது நாளாக நேற்று திருப்போரூர் ஒன்றியத்திலடங்கிய தாழம்பூர் ஏரி மற்றும் வெள்ளக் கால்வாய், படூர் மற்றும் புதுப்பாக்கம் ஏரி, கழிப்பட்டூர் ஓடை ஆகியவற்றை பார்வையிட்டனர். இதைத்தொடர்ந்து தையூர் ஏரி மற்றும் ஏரியில் இருந்து ஓ.எம்.ஆர். சாலை வரை செல்லும் கால்வாய், சிறுதாவூர் ஏரி, மானாம்பதி ஏரி, மானாம்பதி பாசன கால்வாய் மற்றும் மதகு ஆகியவற்றை அதிகாரிகள் குழு பார்வையிட்டது.

இந்த குழுவினர் சென்னைப் புறநகர் பகுதிகளில் அதிக நீர் தேங்கும் ஏரிகள், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கால்வாய்கள், சீரமைக்கப்பட வேண்டிய மதகுகள், கலங்கல்கள் போன்றவை குறித்து ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை ஓரிரு வாரங்களில் தமிழக முதல்வரிடம் வழங்கும் என்றும், அந்த அறிக்கையின் அடிப்படையில் மழைக்காலங்களில் சென்னைப் புறநகர் பகுதி வெள்ளத்தில் பாதிக்கப்படாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய திட்டங்களை செயல்படுத்துவது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஆய்வின்போது செங்கல்பட்டு மாவட்ட திட்ட அலுவலர் செல்வகுமார், திருப்போரூர் வட்டாட்சியர் இராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் பரிமளா ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags : Thiruporur Union , A team of officials inspected the flood-affected areas in Thiruporur Union
× RELATED நாளை உள்ளாட்சித் தேர்தல் வாக்கு...