×

கனிணி வழி வாடகை வசூல் மையங்கள் மூலம் ரூ.120.18 கோடி வசூல்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட அறிக்கை: கடந்த ஆண்டு அக்.8ம் தேதி கணினி வழியாக திருக்கோயில்களின் வாடகைதாரர்கள் வாடகை தொகையினை செலுத்தும் வசதி தொடங்கி வைக்கப்பட்டது. நவ.1ம் தேதி முதல் இணைய வழி மூலம் ரசீது வழங்கும் முறை நடைமுறைக்கு வந்தது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் அசையாச் சொத்துக்களுக்கு பசலி ஆண்டு முறையில் வாடகை, குத்தகை கணக்கிடப்பட்டு வசூல் செய்யப்பட்டு வருகிறது. நடப்பு பசலி ஆண்டு ஜூன் 30ம் தேதி முடிவடைகிறது.

இந்த பசலியில் துறையில் நடவடிக்கையால் கடந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் இன்று வரை ரூ.120 கோடியே 18 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மண்டல வாரியாக இத்தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. அரசின் வழிகாட்டுதல்களாலும், இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களின் தீவிர தொடர் நடவடிக்கைகளாலும் வாடகை, குத்தகை மற்றும் நிலுவைத் தொகை வசூல் விரைவுப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் திருக்கோயில்  திருப்பணிகள், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்திட மிகவும் பயனுள்ளதாக அமையும். எனவே, கோயில் இடத்தில் குடியிருப்பவர்கள், குத்தகைதாரர்கள் முறையான வாடகை தொகையையும், நிலுவை தொகையையும் செலுத்தி திருக்கோயில் வளர்ச்சிக்கு உதவ வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Ganini Way Rental Collection Centres ,Minister ,Sakerbabu , Computer, rent collection, Rs.120.18 crore, collection
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...