×

பட்டமேற்படிப்பில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு முடிவு மார்ச் 6ல் பிஎச்டி ஆராய்ச்சி படிப்புக்கு நுழைவுத்தேர்வு: தேசிய சித்த மருத்துவமனை இயக்குனர் மீனாகுமாரி தகவல்

சென்னை: தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் பட்ட மேற்படிப்பில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நேற்று முன்தினம் நடந்தது. மேலும் வரும் மார்ச் 6ம் தேதி பிஎச்டி  ஆராய்ச்சி படிப்பிற்கான நுழைவு தேர்வு நடைபெறும் என்று இயக்குனர்  ஆர்.மீனாகுமாரி கூறினார். மத்திய  அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய சித்த மருத்துவ  நிறுவனத்தில் இந்த கல்வி ஆண்டின் 2021-22 பட்டமேற்படிப்பு மாணவர்கள் நிறுவன  ஒதுக்கீடு சேர்க்கைக்கான கலந்தாய்வு கடந்த 21ல் தொடங்கியது.  இந்த  நிறுவனத்தில் பட்டமேற்படிப்பு எம்.டி சித்தா படிப்பிற்காக  மொத்தமாக 58  இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் 50 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீடு  மூலமாகவும் மீதி உள்ள 50% இடங்கள் இந்த நிறுவனத்தில் நடத்தப்படும்  கலந்தாய்வின் மூலமாகவும் நிரப்பப்படுகின்றன.

அதன்படி இந்த நிறுவன  ஒதுக்கீடு இடங்களுக்கான கலந்தாய்வு நேற்று முன்தினம் நடந்தது. இதில் தமிழகம்  முழுவதும் 70 மருத்துவர்கள் கலந்துகொண்டனர். அதில் 26 பேருக்கு கல்லூரிகளில் சேருவதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. மேலும் கலந்தாய்விற்கான தேர்ச்சி  அட்டவணை  AIAPGET- யினரால் நடத்தப்பட்ட நுழைவுத் தேர்வு முடிவின் தகுதி  பட்டியலின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது. இந்த கலந்தாய்வின் மூலம் நிறுவன  ஒதுக்கீட்டு இடங்களில், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இடங்கள்  மற்றும் அயல்நாட்டு மாணவர்களுக்கான இடங்கள் தவிர்த்து மற்ற அனைத்து  இடங்களும் நிரப்பப்பட்டன.

இதற்கிடையில், அகில இந்திய ஒதுக்கீடு மூலமாக  நிரப்பப்படும் இடங்களுக்கான முதல் மற்றும் இரண்டாம் சுற்று கலந்தாய்வு  நிறைவு பெற்று அதில் தேர்வு செய்யப்பட்ட பட்டமேற்படிப்பு மாணவர்களின்  சேர்க்கையும் முடிவு பெற்றது. இதை தொடர்ந்து 3வது சுற்று சேர்க்கை  பிப்.28 முதல் மார்ச்  3ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த3  சுற்றுக்களுக்குப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான இடங்கள் நிரப்பப்படாமல்  இருக்கும் இடங்களுக்கான கலந்தாய்வு தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தால்  பின்னர் தேதி அறிவிக்கப்பட்டு நடத்தப்படும். மேலும் பிஎச்டி  ஆராய்ச்சிப் படிப்பிற்கான இந்த கல்வியாண்டு சேர்க்கைக்கான நுழைவு தேர்வும் மார்ச் 6ம் தேதி நடைபெறும் என இயக்குனர்  ஆர்.மீனாகுமாரி கூறினார்.    


Tags : National Siddha Hospital ,Meenakumari , Director of Postgraduate, Student Admissions, Consulting, PhD Research, Entrance Examination, National Paranormal Hospital
× RELATED சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு...