×

புதிதாக உருவாக்கப்பட்ட அனைத்து மாநகராட்சிகளிலும் அபார வெற்றி கொங்கு மண்டலத்தில் திமுக கொடி பறக்கிறது

* அதிமுக, பாஜ, நாம் தமிழர், மநீம, பாமக, தேமுதிகவுக்கு டெபாசிட் காலி
* வேட்பாளர்களின் குடும்பத்தினர்கள் மாற்று கட்சிக்கு ஓட்டு போட்ட அவலம்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரலாற்றில் வெற்றி பெற்றதன் மூலம் அதிமுக கோட்டையான கொங்கு மண்டலத்தில் திமுக கொடி பறக்கிறது. நகர்ப்புற உள்ளாட்சிதேர்தலில் சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை 85% இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றி உள்ளது. இதேபோல், மற்ற 20 மாநகராட்சிகளையும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் 80% முதல் 90% வரை வெற்றி பெற்றுள்ளனர். குறிப்பாக, புதிதாக உருவாக்கப்பட்டு முதல் முறையாக தேர்தலை சந்தித்த கும்பகோணம், தாம்பரம், ஆவடி, சிவகாசி, கடலூர், கரூர், நாகர்கோவில், காஞ்சிபுரம், ஓசூர் ஆகிய மாநகராட்சிகள் உட்பட 21 மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றி மேயர் பதவியை பிடித்துள்ளது.

நகராட்சி மற்றும் பேரூராட்சிகளை பொறுத்தவரை திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை தங்களை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக, பாஜ, பாமக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் டெபாசிட் இழந்தது. குறிப்பாக, எந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளிலும் அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சி வேட்பாளர்கள் கூட்டாக சேர்ந்து ஒற்றை இலக்கை வெற்றியை கூட பதிவு செய்யவில்லை. பெரும்பாலான இடங்களில் போட்டியிட்ட பாஜ வேட்பாளர்கள் பூஜ்ஜியம், ஒரு ஒட்டு என ஒற்றை இலக்கு ஓட்டுகளே பெற்றுள்ளனர். குடும்பத்தினர் கூட பாஜவுக்கு ஓட்டு போட அவலம் அரங்கேறி உள்ளது.

மேற்கு மண்டலத்தில் கோவை, சேலம், ஈரோடு, கரூ, நாமக்கல், திருப்பூர், உடுமலை ஆகிய மாவட்டங்களில் அதிமுகவின் கோட்டை என கூறி வந்தனர். ஆனால், ஊரக உள்ளாட்சி தேர்தல் போன்று, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுகவின் கோட்டையை திமுக பிடித்து உள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி சேல ஆகிய மாவட்டங்களில் உள்ள 39 சட்டமன்ற தொகுதிகளில் 30 தொகுதிகளில் அதிமுக வென்றும், உள்ளாட்சி தேர்தலில் ஒற்றை இலக்கு வார்டுகளே கைப்பற்றி உள்ளன. இதனால், கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு ஆகிய 4 மாநகராட்சிகளும் திமுக வசமானது. கோவை, திருச்சி உள்ளிட்ட சில மாவட்டங்களில் அதிமுக 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் நகராட்சியை 40 ஆண்டுகளுக்கு பிறகு திமுக கைப்பற்றிய உள்ளது. இடைப்பாடி பழனிச்சாமியின் சொந்த ஊரான எடப்பாடி நகராட்சியையும் திமுக கைப்பற்றி உள்ளது. அவர் வசிக்கும் வார்டிலும் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். கோவையில் எஸ்.பி.வேலுமணி தொகுதி உட்பட மாவட்ட முழுவதும் திமுக பிரமாண்ட வெற்றியை பதிவு செய்துள்ளது. மாஜி அமைச்சர் தங்கமணி மாவட்டமான நாமக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் திமுக மற்றும் கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளனர்.

மாநகராட்சி மட்டுமின்றி, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, காரமடை, கூடலூர்,  கருமத்தம்பட்டி, மதுக்கரை நகராட்சிகளிலும் திமுக வெற்றி பெற்றது. ஒரு  நகராட்சிகளில்கூட இரட்டை இலக்க வெற்றியை அதிமுக பெறவில்லை. மேலும், 32  பேரூராட்சிகளிலும் திமுக வெற்றி பெற்றது. கோவை வெள்ளலூர் பேரூராட்சியை  மட்டும் அதிமுக கைப்பற்றியது. திருப்பூர் மாவட்டத்தில் 60 வார்டுகள்  கொண்ட திருப்பூர் மாநகராட்சி மற்றும் வெள்ளக்கோவில், தாராபுரம், உடுமலை,  திருமுருகன்பூண்டி, பல்லடம், காங்கயம் நகராட்சிகள், 15 பேரூராட்சிகளை திமுக  கைப்பற்றியது. ஈரோடு மாவட்டத்திலும் ஈரோடு மாநகராட்சி மற்றும் பவானி, சத்தியமங்கலம், கோபி, புஞ்சை புளியம்பட்டி நகராட்சிகளையும், 42  பேரூராட்சிகளையும் திமுக கைப்பற்றியது. நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி,  குன்னூர், கூடலூர், நெல்லியாளம் நகராட்சிகள் மற்றும் 11 பேரூராட்சிகள்  திமுக வசமானது.     
                   
இதேபோல் மேற்கு மண்டலத்தில் எங்களுக்கு செல்வாக்கு இருக்கும் என கூறும் பாஜவும் படுதோல்வியடைந்துள்ளது.  பா.ஜ.வை சேர்ந்த வானதி சீனிவாசன் எம்எல்ஏவாக தேர்வான கோவை தெற்கு  தொகுதி மற்றும் சரஸ்வதி தேர்வான மொடக்குறிச்சி தொகுதிக்கு உட்பட அனைத்து வார்டுகளிலும் சொற்ப வாக்குகளே பெற்று படுதோல்வி அடைந்துள்ளது. சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் 48  வார்டுகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளனர். 33 வார்டுகளை கொண்ட  தர்மபுரி நகராட்சியில் 20 வார்டுகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.  இங்குள்ள 10 பேரூராட்சிகளில் 9ஐ திமுக கூட்டணி கைப்பற்றி உள்ளது. இதேபோல்  33 வார்டுகளை கொண்ட கிருஷ்ணகிரி நகராட்சியில் 23 வார்டுகளை திமுக கூட்டணி  கைப்பற்றி உள்ளது. இங்குள்ள 6பேரூராட்சிகளில் 5ஐ திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதேபோல் தமிழகத்தின் புத்தம் புதிய மாநகராட்சியாக உருவானது  கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஓசூர். இங்குள்ள 45வார்டுகளில் 22வார்டுகளில்  திமுக கூட்டணி கைப்பற்றி உள்ளது. இதன் மூலம் ஓசூர் நகராட்சியிலும்  வெற்றிக்கனியை பறித்துள்ளது.

* முன்னாள் முதல்வர்கள், அமைச்சர்கள் தொகுதிகளில் மண்ணை கவ்வினர்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்த மாஜி முதல்வர்கள் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம், மாஜி அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம், ஓ.எஸ்.மணியன், காமராஜ், சி.விஜயபாஸ்கர், எம்.சி.சம்பத், கடம்பூர் ராஜூ, செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி, உதயகுமார், கே.பி.அன்பழகன், கே.சி.வீரமணி உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள் தாங்கள் எம்எல்ஏவாக இருக்கும் தொகுதிகள் மற்றும் சொந்த மாவட்டங்களில் உள்ள வார்டுகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்றுள்ளனர். பல இடங்களில் வரலாற்று வெற்றியை திமுக பதிவு செய்துள்ளது.

* ஒரே மாவட்டத்தில் 2 மாநகராட்சி
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளும் பல்வேறு மாவட்டங்களில் அமைந்துள்ளது. தஞ்சை மாவட்டத்தில் மட்டும் தஞ்சாவூர், கும்பகோணம் மாநகராட்சிகள் அமைந்துள்ளது. கும்பகோணம் மாநகராட்சி புதிதாக உருவாக்கப்பட்டு சந்திக்கும் முதல் தேர்தல் இது. இந்த இரண்டு மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றி முத்திரை பதித்துள்ளது.

* தென் மாவட்டங்களில் அதிமுக காலி  
தென்  மண்டலத்திலும் திமுக கொடியை நாட்டி உள்ளது. நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில், மதுரை, சிவகாசி, உள்ளிட்ட மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றி உள்ளது. இதேபோல், தென் மாவட்டங்களில் உள்ள நகராட்சி மற்றும்  பேரூராட்சிகளிலும் பெரும்பான்மையான வார்டுகளை திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் அள்ளி உள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு கோவில்பட்டி நகராட்சி திமுக வசமானது. தேனி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நகராட்சி மற்றும் பேரூராட்சிகளை திமுக கைப்பற்றி உள்ளது. குறிப்பாக, மாஜி முதல்வர் ஓபிஎஸ் எம்எல்ஏ தொகுதி மற்றும் அவரது வீடு இருக்கும் பகுதிகளில் திமுக வென்று உள்ளது.

* வடமாவட்டங்களில் அமோகம்
வடமாவட்டங்களான வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஆகிய மாவட்டங்களில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளை மொத்தமாக கைப்பற்றி உள்ளது. மாஜி அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும்  எம்.சி.சம்பத் சொந்த மாவட்டங்களான விழுப்புரம், கடலூரில் மண்ணை கவ்வினர்.

* கரூரில் அதிமுகவுக்கு இரண்டே இடம்தான்
மத்திய மண்டலம் திமுக கோட்டையாக உள்ளது. இங்கு உள்ள  திருச்சி, தஞ்சை, கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் திமுக மற்றும்  கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றியை தங்கள் வசப்படுத்தி உள்ளனர். இதில்  கரூர் மாநகராட்சியில் வெறும் 2 வார்டுகளில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்று  உள்ளது. திருச்சி, தஞ்சை, கும்பகோணம் ஆகிய 3 மாநகராட்சிகளையும் திமுக  கைப்பற்றி உள்ளது. மற்ற மாவட்டங்களில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பிரமாண்ட வெற்றி பெற்றுள்ளது. அதிமுக மற்றும் பாஜ தனித்து போட்டி என அறிவித்தாலும், புதுகை  மாவட்டத்தில் மட்டும் கூட்டணி வைத்து போட்டியிட்டது. இதற்காக அதிமுக  மற்றும் பாஜ வேட்பாளர்களை ஆதரித்து மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் பிரசாரம்  செய்தார். இருப்பினும், அங்கும் திமுக நிறைய இடங்களை அள்ளியது. இதேபோல்,  அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரான வைத்திலிங்கம் மாவட்டமான தஞ்சாவூர், மாஜி அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், காமராஜ், எம்.ஆர்.விஜயாபாஸ்கர், வெல்லமண்டி  நடராஜன் ஆகியோர்களின் சொந்த மாவட்டமான நாகை, திருவாரூர், கரூர், திருச்சி  ஆகிய மாவட்டங்களை திமுக கைப்பற்றி உள்ளது.

* வரலாற்றில் முதல் திமுக மேயர்
கோவை மாநகர், கடந்த 1981-ம் ஆண்டில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. முதல்முறையாக கடந்த 1996-ம் ஆண்டில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற தமாகாவை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மேயரானார். 2001-ல் அதிமுகவை சார்ந்த மலரவன், 2006-ல் மீண்டும் திமுக கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ் சார்பில் காலனி வெங்கடாசலம், 2011-ல் அதிமுகவை சார்ந்த செ.ம.வேலுச்சாமி, கணபதி ராஜ்குமார் ஆகியோர் மேயரானார்கள். திமுக ஆதரவில் கோபாலகிருஷ்ணன், காலனி வெங்கடாசலம் ஆகியோர் மேயர் பதவி வகித்தாலும், இதுவரை திமுக நேரடியாக மேயர் பதவியில் அமரவில்லை. இந்த வெற்றி மூலம் வரலாற்றில் முதல்முறையாக கோவை மாநகராட்சியில் திமுகவை சேர்ந்த பெண் மேயர் பதவியில் அமர இருக்கிறார்.

Tags : Kongu , The DMK flag flies in the Kongu region with overwhelming success in all the newly formed corporations
× RELATED இன்ஸ்பெக்டருடன் உல்லாசம் பெண் எஸ்ஐ அதிரடி டிரான்ஸ்பர்