×

காவல்கிணறு - நாகர்கோவில் இடையே நான்கு வழிச்சாலை விரைவில் திறப்பு-18 ஆண்டு கால கனவு நிறைவேறுகிறது

நாகர்கோவில்  :  குமரி மாவட்டத்தில் நான்கு வழிச்சாலை பணிகள் தொடங்கப்பட்டு 18   ஆண்டுகளுக்கு பின், தற்போது நாகர்கோவில் - காவல்கிணறு இடையே சாலை பணிகள்  விரைவில் முடியும் நிலையில் உள்ளது.மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர்  வரை நாடு முழுவதையும் இணைக்கும் வகையில் தங்க நாற்கர சாலை திட்டம் கொண்டு  வரப்பட்டது. இந்த திட்டம் நாட்டின் தென்கோடி முனையில் அமைந்துள்ள  கன்னியாகுமரியில் 2004ம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது.

பணிகள் வேகமாக நடைபெற்றன. கடந்த 18 ஆண்டுகளில் பல்வேறு மாநிலங்களில் இந்த நான்கு  வழிச்சாலைகள் முடிவடைந்து போக்குவரத்து பயன்பாட்டில் உள்ளன. தமிழ்நாட்டிலும் கூட பல்வேறு மாவட்டங்களில் நான்கு வழிச்சாலை பணி நிறைவு பெற்று, போக்குவரத்து நடந்து வருகிறது. ஆனால் தங்க நாற்கர சாலை திட்டம்  தொடங்கப்பட்ட கன்னியாகுமரியில் தான் இன்னும் நான்கு வழிச்சாலைகள் முடிவடைய  வில்லை. சுமார் 18 ஆண்டுகளாக இந்த பணிகள், குமரி மாவட்டத்தில் நிறைவடையாமல்  உள்ளன. இதனால் 70 கி.மீ தொலைவில் உள்ள திருவனந்தபுரம் செல்ல இரண்டரை மணி  நேரம் ஆகிறது. இந்த நிலையில் கடந்த முறை ஒன்றிய அமைச்சராக இருந்த  பொன்.ராதாகிருஷ்ணனுக்கு மத்திய தரைவழி போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் இணை  அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, தங்க நாற்கர சாலை  பணிகள் குமரி மாவட்டத்தில் மீண்டும் வேகமெடுத்தன.

காரோடு முதல்  வில்லுக்குறி வரை 27 கி.மீட்டர் தூரம், வில்லுக்குறி முதல் நாகர்கோவில்  அப்டா சந்தை வரை 14 கி.மீ., அப்டா சந்தை முதல் காவல்கிணறு பெருங்குடி வரை  16 கி.மீ., அப்டா சந்தை முதல் முருகன்குன்றம் வரையில் 12 கி.மீ தூரத்துக்கு  சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. காரோடு - வில்லுக்குறி 27.25 கி.மீ சாலை  அமைக்க ரூ.1274.34 கோடியும், வில்லுக்குறி - கன்னியாகுமரி மற்றும்  காவல்கிணறு வரை சாலை அமைக்க 42.703 கி.மீக்கு ரூ.1041.34 கோடியும் நிதி  ஒதுக்கப்பட்டு 19.01.2016 ல் பணிகள் தொடங்கப்பட்டன. இதில் அப்டா மார்க்கெட்  முதல் காவல்கிணறு வரையிலான சாலை பணிகள் கடந்த 2016 ம் ஆண்டு, ஆகஸ்ட் 2ம்  தேதி தொடங்கப்பட்டது.

காவல்கிணறு  அருகே பெருங்குடியில் இருந்து பணிகள் தொடங்கின.  18 மாதங்களில் இந்த பணியை  முடிக்க திட்டமிடப்பட்டது. நவீன இயந்திரங்கள் உதவியுடன் பணிகள் வேகமாக  நடைபெற்றன. ஆனால் 2018 ல் இந்த சாலை முடிக்கப்பட்டு, போக்குவரத்து  தொடங்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் இணைப்பு சாலைகள், ரயில்வே மற்றும்  நீர் நிலைகள் மேல் மேம்பாலங்கள், மண் தட்டுப்பாடு என பல்வேறு பிரச்சினைகள்  காரணமாக இந்த பணிகள் இழுபறி நிலையில் இருந்தன.

தற்போது இந்த பணிகள் இறுதி  கட்டத்தை எட்டி உள்ளன. ஆரல்வாய்மொழி- குமாரபுரம் இணைப்பு சாலை, தோவாளை - ராஜாவூர் இணைப்பு சாலை  பணிகள் முடிவடைந்துள்ளன. தற்போது குமாரபுரம் விலக்கு கடந்து, ரயில்வே பாலம்  அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளும் இறுதி கட்டத்தை எட்டி  உள்ளன. தற்போது 200க்கும் மேற்பட்ட பணியாளர்கள் முழு வீச்சில் இந்த பணியில்  ஈடுபட்டு வருகிறார்கள். இந்த பணிகள் இன்னும் 2 மாதங்களில் முடிவடையும் என  தெரிகிறது. இந்த பணிகளுடன் தற்போது சாலைகளில் உள்ள புதர்களை அகற்றுதல்,  சாலையில் எச்சரிக்கை வர்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பணிகளும் நடக்கின்றன.

 மேலும் வெள்ளமடம் அருகே டோல்கேட் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.  தெற்குமலை அடிவாரத்தில் செல்லும் நான்கு வழிச்சாலையில் மழை நீர்  செல்வதற்கான சிறுபாலம் அமைக்கப்பட வேண்டி உள்ளது. இந்த பணியும் நடந்து  வருகிறது. இந்த சாலை பணிக்காக மண் குவியல்களும் தயாராக  உள்ளன. இந்த பணிகளும் ஏப்ரல் மாதத்துக்குள் முடிக்கப்படும் என தெரிகிறது. மே அல்லது  ஜூன் மாதத்தில் போக்குவரத்து தொடங்கும் என தெரிகிறது.

காவல்கிணறு  முதல் நாகர்கோவில் அப்டா மார்க்கெட் வரையிலான நான்கு வழிச்சாலையில்  போக்குவரத்து தொடங்கினால், நாகர்கோவில் - திருநெல்வேலி பயண நேரம் வெகுவாக  குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நாகர்கோவில் - திருநெல்வேலி  இடையே  இயக்கப்படும் என்ட் டூ என்ட் பஸ்களின் பயண நேரமே 1.30 மணி நேரம்  ஆகிறது. 1 மணி 10 நிமிடம் தான் என்ட் டூ என்ட் பஸ்களின் பயண நேரமாக  இருந்தது. ஆனால் நாகர்கோவிலில் இருந்து காவல்கிணறு சந்திப்பு செல்லும் வரை  இரு வழிச்சாலையில் போக்குவரத்து நெருக்கடியில் பஸ்கள் செல்வதால், பயண நேரம்  அதிரிக்கிறது.  நான்கு வழிச்சாலை திறந்தால், 1 மணி 10 நிமிடத்தில் என்ட் டூ என்ட் பஸ்கள், திருநெல்வேலியை சென்றடையும். இடையில் காவல்கிணறில் நிறுத்தம் அமைக்கப்படும் என தெரிகிறது.

சென்னைக்கான பயண நேரம் குறையும்

குமரியில் அமைக்கப்படும் தங்க நாற்கரசாலை எகஸ்பிரஸ் வே ஆகும். இதன்படி 3 முதல் 5  மீட்டர் தரைமட்டத்திலிருந்து உயர்த்தி அதன்பின் முக்கால் அடி கனத்தில்  கான்கிரீட் சாலையாக போடப்படுகிறது. ரயில்வே மேம்பாலங்களில் கான்கிரிட்  அடித்தளம் கொண்ட இரும்பு பாலங்களாக அமைகிறது. மெட்ரோ பாலிட்டன் நகரங்களான  டெல்லி, மும்பையில் எக்ஸ்பிரஸ் வே சாலை இருந்தாலும் சென்னையில் இச்சாலை  இல்லை. தமிழகத்தில் முதன்முறையாக குமரியில் ‘எக்ஸ்பிரஸ் வே’சாலை அமைகிறது  என்பது குறிப்பிடத்தக்கது. நாகர்கோவில் - காவல்கிணறு இடையே நான்கு  வழிச்சாலை திறப்பை குமரி மாவட்ட மக்கள் ஆர்வமாக எதிர்பார்க்கிறர்கள். இந்த  சாலை திறந்தால், நாகர்கோவில் - சென்னை இடையிலான பயண நேரமும் குறையும்  என்பது ெபாதுமக்களின் கருத்தாகும். எனவே  தற்போது நடந்து வரும் பணிகளை  வேகப்படுத்தி ஜூன் மாதத்துக்குள் சாலையை திறக்க வேண்டும் என்பது அனைவரின்  வேண்டுகோளாகும்.

Tags : Kavalkinaru ,Nagercoil , Nagercoil: 18 years after the commencement of four lane works in Kumari district, now Nagercoil -
× RELATED தாம்பரம் – நாகர்கோவில் விரைவு ரயிலில்...