×

சூரியகுமார் அதிரடி அரை சதம் இந்தியா 184 ரன் குவிப்பு

கொல்கத்தா: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில், சூரியகுமார் யாதவின் அதிரடி அரை சதத்தால் இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 184 ரன் குவித்தது. ஈடன் கார்டனில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீசியது. இரு அணியிலும் தலா 4 மாற்றங்கள் செய்யப்பட்டன. ருதுராஜ் கெயிக்வாட், இஷான் கிஷன் இருவரும் இந்திய இன்னிங்சை தொடங்கினர்.

ருதுராஜ் 4 ரன் எடுத்து ஹோல்டர் பந்துவீச்சில் மேயர்ஸ் வசம் பிடிபட்டார். அடுத்து இஷானுடன் ஷ்ரேயாஸ் இணைந்தார். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 53 ரன் சேர்த்தது. ஷ்ரேயாஸ் 25 ரன், இஷான் 34 ரன் எடுத்து பெவிலியன் திரும்ப, கேப்டன் ரோகித் 7 ரன் எடுத்து டிரேக்ஸ் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். இந்தியா 13.5 ஓவரில் 93 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திணறிய நிலையில், சூரியகுமார் - வெங்கடேஷ் இணைந்து வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தவிடுபொடியாக்கினர்.

இந்த ஜோடி பவுண்டரியும், சிக்சருமாகப் பறக்கவிட இந்திய ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. சூரியகுமார் 27 பந்தில் 1 பவுண்டரி, 5 சிக்சருடன் அரை சதமடித்தார். ஷெப்பர்ட் வீசிய கடைசி ஓவரில் 3 இமாலய சிக்சர்களை தூக்கிய அவர் 65 ரன் (31 பந்து, 1 பவுண்டரி, 7 சிக்சர்) விளாசி கடைசி பந்தில் பாவெல் வசம் பிடிபட்டார். இந்தியா 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 184 ரன் குவித்தது. வெங்கடேஷ் 35 ரன்னுடன் (19 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் ஹோல்டர், ஷெப்பர்ட், சேஸ், ஹேடன் வால்ஷ், டிரேக்ஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 185 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது.

Tags : Half Century ,India , Suriyakumar, half century, India
× RELATED போரெல், ஸ்டப்ஸ் அதிரடி அரை சதம் லக்னோவை வீழ்த்தியது டெல்லி