×

உத்தரபிரதேச தேர்தல் பிரசாரத்தில் ஒன்றிய பாஜக அமைச்சர், பெண் எம்பியின் கார் மீது கல்வீசி தாக்குதல்: அகிலேஷ் போட்டியிடும் தொகுதியில் பரபரப்பு

மையின்புரி: உத்தரபிரதேச தேர்தல் பிரசாரத்தில் ஒன்றிய பாஜக அமைச்சர், பெண் எம்பியின் கார் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவம், அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் மையின்புரி மாவட்டம் அத்திகுல்லாபூர் கிராமம் அருகே நேற்று மாலை ஒன்றிய சட்டம் மற்றும் நீதித்துறை இணை அமைச்சர் சத்ய பால் சிங்
பாகேல் காரில் ெசன்றார். இவர், கர்ஹால் சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் என்பதால், தொடர்ந்து அந்த தொகுதியில் பிரசாரம் செய்து வருகிறார். அமைச்சராக இருந்தும் எம்எல்ஏ பதவிக்கு இவர் போட்டியிடக் காரணம், இந்த தொகுதியில் சமாஜ்வாதி கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் போட்டியிடுகிறார் என்பதால் களமிறக்கப்பட்டுள்ளார்.

 இந்நிலையில்  அத்திகுல்லாபூர் கிராமத்திற்கு அருகே அமைச்சரின் கார் சென்ற போது, அப்பகுதியை சேர்ந்த சிலர் அமைச்சரின் கான்வாய் கார் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் அமைச்சருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. இதுகுறித்து போலீஸ் எஸ்பி சிங் பாகேல் கூறுகையில், ‘தேர்தல் பிரசாரத்திற்கு சென்ற அமைச்சரின் கான்வாய் கார் மீது திடீரென சிலர் வயல்வெளியில் இருந்து வெளியே வந்து கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். அவர்களிடம் லத்திகள், இரும்பு கம்பிகள் இருந்தன. தாக்குதல் நடத்திய கும்பலை தேடி வருகிறோம்’ என்றார். இதுகுறித்து அமைச்சர் சத்யபால் சிங் பாகேல் கூறுகையில், ‘தாக்குதல் நடத்தியவர்களின் ஒருவரான உமாகாந்த் என்பவர் ‘இன்று அமைச்சரை விட்டுவிடக்கூடாது’ என்று கூச்சலிட்டனர்.

மற்றொரு கான்வாய் கார் மீது, கூட்டத்தில் இருந்த மற்றொருவர் துப்பாக்கியால் சுட்டார். அதிர்ஷ்டவசமாக என்னுடன் வந்தவர்கள் உயிர்தப்பினர்’ என்றார். இச்சம்பவம் குறித்து உத்தரப் பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா கூறுகையில், ‘சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த குண்டர்களால் அமைச்சரின் வாகனம் தாக்கப்பட்டது. அதேபோல் மற்றொரு சம்பவத்தில் பாஜக எம்பி கீதா ஷக்யாவும் தாக்கப்பட்டார். இரு சம்பவங்களுக்கும் காரணமானவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். ஒன்றிய பாஜக அமைச்சர், பெண் எம்பியின் கார் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவம், அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Tags : Union BJP ,Uttar ,Pradesh ,Kalvi ,Akhilesh , Uttar Pradesh, Election, Union BJP Minister, Attack
× RELATED உத்தரபிரதேசத்தில் கள்ளக்காதலை...