திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே ஆசிரமத்தில் கடந்த இரண்டு வருடத்துக்கு மேலாக தங்கியிருந்த கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுசம்பந்தமாக பூசாரியிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அடுத்த வெள்ளாத்துகோட்டை கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக முனுசாமி என்பவர் ஆசிரமம் நடத்தி வருகிறார். இந்த ஆசிரமத்துக்கு இளம்பெண்கள் மற்றும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், திருமணம் ஆகாதவர்கள் வந்து பூசாரியிடம் குறிகேட்டு சொல்வார்களாம். இதன்காரணமாக ஆசிரமத்துக்கு தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் வந்து சென்றுள்ளனர்.
செம்பேடு பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரின் மகள் ஹேமமாலினி (20). இவர் திருவள்ளூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் 3ம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு கடந்த 1 ஆண்டுகளுக்கு முன் உடல்நிலை சரியில்லாததால் ஆசிரமத்துக்கு சென்று பூசாரி முனுசாமியை சந்தித்துள்ளனர். அப்போது பூசாரி, ‘’ஹேமமாலினிக்கு நாகதோஷம் இருக்கிறது. எனவே, அமாவாசை மற்றும் பவுர்ணமி அன்று பூஜை செய்தால் தோஷம் நீங்கும்’ என்று கூறியுள்ளார். இதையடுத்து கடந்த 2020ம் ஆண்டு முதல் ஆசிரமத்திலேயே ஹேமமாலினி தங்கவைக்கப்பட்டுள்ளார். இதன்பிறகு அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்கள் மட்டுமின்றி தினமும் இரவில் மாந்திரீகம் செய்துள்ளார். மேலும் கொரோனாவை காரணம் காட்டி மாணவியை வீட்டுக்கு அனுப்பாமல் ஆசிரமத்திலேயே வைத்திருந்திருக்கிறார்.
இந்த நிலையில், கல்லூரி திறந்தபிறகும் வாரத்துக்கு இரண்டு அல்லது 3 நாட்கள் ஆசிரமத்துக்கு அழைத்துச்சென்று ஹேமமாலினியை தங்கவைத்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 11ம் தேதி, ஹேமமாலினியை பூஜைக்கு வருமாறு பூசாரி அழைத்துள்ளார். அன்றைய தினம் நள்ளிரவு 12 மணி வரை பூசாரிக்கு தேவையான அனைத்து பணிகளையும் செய்து கொடுத்துள்ளார். நேற்று முன்தினம் அதிகாலை 4 மணி அளவில் ஹேமமாலினி திடீரென்று வாந்தி எடுத்து மயங்கி விழுந்ததுடன் சோர்வுடன் காணப்பட்டுள்ளார். இருப்பினும் ஆசிரமத்திலேயே தொடர்ந்து வைத்துள்ளனர். இந்த நிலையில், அவரது உடல்நிலை மேலும் மோசம் அடைந்ததால் உடனடியாக அவரது பெரியம்மா இந்திராணி, பூசாரி முனுசாமியை சந்தித்து மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வாகனம் ஏற்பாடு செய்யும்படி கூறியுள்ளார்.
ஆனால் பூசாரி சுமார் 2 மணி நேரம் அமைதி காத்து அதன் பிறகு ஒரு ஆட்டோவை வரவழைத்து அதில், ஹேமமாலினியை ஏற்றி வெங்கல் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு மாணவியை பரிசோதனை செய்தபோது பூச்சி மருந்து குடித்திருப்பது தெரிந்தது. இதனால் அவரை உடனடியாக மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த ஹேமமாலினி உயிரிழந்தார். இது சம்பந்தமாக ஹேமமாலினியின் பெற்றோர் கொடுத்த புகாரின்படி, பெண்ணலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து பூசாரியிடம் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.