×

பொர்ப்பம் கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் உடல்நலம் பாதித்த வாலிபரை 3 கி.மீ. தூரம் கட்டிலில் தூக்கி சென்று சிகிச்சை அளிப்பு -ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பாராட்டு

சின்னசேலம் : கல்வராயன்மலையில் உள்ள வேங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட பொர்ப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சன் மகன் கந்தசாமி (27). இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் நேற்று மதியம் இவரது உடல்நலம் மிகவும் மோசமடைந்துள்ளது. இதையடுத்து இவரது உறவினர்கள், இவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல 108 ஆம்புலன்சை அழைத்துள்ளனர். அந்த வாகனத்தை கோவிந்தராஜ், மதியழகன் ஆகியோர் ஓட்டி வந்தனர்.

ஆனால் பொர்ப்பம் கிராமம் வரை செல்ல போதிய சாலை வசதி இல்லாததால் வாகனத்தை பலாப்பூண்டி கிராமம் அருகே நிறுத்திவிட்டு இருவரும் நடந்தே சென்றுள்ளனர். அங்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட கந்தசாமியை கட்டிலில் வைத்து, சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்தே தூக்கி வந்து, பின்னர் ஆம்புலன்சில் ஏற்றி கரியாலூர் அருகே உள்ள மாவடிப்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் சரியான சாலை வசதி இல்லாததால் நோயால் பாதிக்கப்பட்டவரை கட்டிலில் வைத்து தூக்கி வந்து மருத்துவ சிகிச்சை அளித்த ஆம்புலன்ஸ் ஊழியர்களை பொதுமக்கள் பாராட்டினர்.


Tags : Porpam village ,Valiparai , Chinnasalem: Kandasamy (27), son of Pichan, hails from Porpam village under Venkodu panchayat in Kalwarayanmalai.
× RELATED க.மயிலாடும்பாறை ஒன்றியத்தில் அரசு...