×

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரி நாளை பதவியேற்பு: ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக தற்போது பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்து வரும் முனீஸ்வர் நாத் பண்டாரி நாளை பதவியேற்கிறார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆளுநர் மாளிகையில் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக,  கடந்த ஆண்டு நவம்பர் 22ல் பதவியேற்ற நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி பின்னர் பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அன்றைய தேதி முதல் சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக  அவர் பதவி வகித்து வருகிறார்.

குறுகிய காலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுநல வழக்குகளை தீர்த்து வைத்துள்ளார். நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு, கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு, மேய்ச்சல் புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பு ஆகியவற்றை அகற்றுவதில் எந்த சமரசமும் செய்யாமல் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டு வருகிறார். இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க முனீஸ்வர் நாத் பண்டாரியை  உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்தது.

இந்த பரிந்துரையை ஏற்ற குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரியை சென்னை உயர் நீதிமன்ற  தலைமை நீதிபதியாக நியமித்து உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரி நாளை பதவியேற்க உள்ளார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைக்கவுள்ளார். இந்நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், உயர் நீதிமன்ற நீதிபதிகள், அமைச்சர்கள் துரைமுருகன், ரகுபதி, தலைமை செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

Tags : Muneeswar Nath Bandari ,Chennai Chief Justice ,Governor ,RN Ravi , Muneeswar Nath Bandari to be sworn in as Chennai Chief Justice tomorrow: Governor RN Ravi takes oath
× RELATED கொடைக்கானலுக்குச் செல்ல உள்ளூர்...