சென்னை: ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவுவதற்காக 8 உறுப்பினர்களை கொண்ட எய்ம்ஸ் மருத்துவர்கள் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளனர். இதை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக வரும் 16ம் தேதி முதல் ஆணையம் சார்பில் மருத்துவக்குழுவுடன் ஆலோசிக்கிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமயிலான விசாரணை ஆணையம் அமைத்து கடந்த 2017ம் ஆண்டு தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்த ஆணையம் சார்பில் இதுவரை அப்போலோ டாக்டர்கள், அரசு மருத்துவர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், ஜெயலலிதாவின் பாதுகாவலர், போயஸ் கார்டனில் பணியாற்றிய ஊழியர்கள், அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட மொத்தம் 157 பேரிடம் விசாரணை நடத்தி முடித்துள்ளது. ஆணையத்தின் விசாரணை 90 சதவீதம் முடிந்த நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் விசாரணையை நடத்தி முடித்து விட்டு அறிக்கை தாக்கல் செய்ய திட்டமிட்டிருந்தது. இந்த நிலையில் திடீரென அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் ஆணையத்தின் விசாரணைக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தை அணுகியது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆணையத்துக்கு உதவ எம்ய்ஸ் மருத்துவர்கள் கொண்ட குழுவை அமைக்க அறிவுறுத்தியது. இதை தொடர்ந்து, அப்போலோவின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், ஆறுமுகச்சாமி ஆணையத்தின் விசாரணையின் போது உடன் இருக்க வேண்டும் என்பதால் மருத்துவர்களின் பெயர்களை விரைவில் பரிந்துரைக்குமாறு எய்ம்ஸ் இயக்குனருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஆறுமுகசாமி ஆணையம் சார்பில் கடிதம் எழுதியிருந்தது.
அதன்பேரில், ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவுவதற்காக 8 உறுப்பினர்களை கொண்ட மருத்துவர்கள் குழுவை ‘எய்ம்ஸ்’ (அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம்) நியமித்துள்ளது. ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையின் நாளமில்லா சுரப்பி துறையின் தலைவர் டாக்டர் நிகில் தாண்டன், குழுவின் தலைவராகவும் டாக்டர்கள் ராஜீவ் நரங், ஆனந்த் மோகன், விமிரிவாரி, நிதிஷ் நாயக், வி.தேவ கவுரோ ஆகியோர் குழுவின் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். டாக்டர் அனந்த் நவீன் ரெட்டி, உறுப்பினர் செயலராகவும், டாக்டர் விஷால் போகாட் பார்வையாளராகவும் இருப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில் இடம்பெற்றுள்ள அனைவரும் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை தொடர்பான துறை ரீதியிலான வல்லுநர்கள் ஆவர். இவர்கள், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது, நேரில் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டறிந்தனர். இந்த நிலையில், தற்போது ஆணையத்துக்கு உதவியாக மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், ஆணையத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து மருத்துவர்களுடன் வரும் 16ம் தேதி ஆலோசனை நடத்துகிறது. இக்கூட்டத்தில் மீண்டும், அப்போலோ டாக்டர்கள், அரசு டாக்டர்களுக்கு மீண்டும் விசாரணைக்கு அழைப்பு விடுக்கலாமா, அப்போலோ நிர்வாகம் அளித்துள்ள மருத்துவ அறிக்கையை பரிசீலனைக்கு எடுத்து கொண்டால் போதுமா? என்பது குறித்து பின்னர் தான் தெரிய வரும் என்று ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
