×

மயிலாடுதுறை அருகே மூவலூரில் 3 ஆண்டாக கட்டப்படாத பாலத்தால் 5 கி.மீட்டர் சுற்றி செல்லும் அவலம்: மாணவர்கள் அபாய பயணம்

குத்தாலம்: மயிலாடுதுறை அருகே மூவலூரில் மூன்று ஆண்டுகளாக பாலம் அமைக்கப்படாததால் பொதுமக்கள் ஐந்து கிலோமீட்டர் சுற்றி செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் மூவலூரில் இருந்து கோழிகுத்தி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு இடையில் உள்ள காவிரி ஆற்றை தான் கடந்து செல்ல வேண்டும். இதற்காக ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த பாலம் பழுதடைந்ததை அடுத்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பழைய பாலம் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ 3.5 கோடி மதிப்பில் மூலம் புதிதாக பாலம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்ற நிலையில் பாலம் அமைக்கும் பணி கடந்த ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டது. காவிரி ஆற்றின் குறுக்கே புதிய பாலம் அமைக்கப்படாததால் குறைந்த தூரத்திலுள்ள மூவலூருக்கு பொதுமக்கள் ஐந்து கிலோ மீட்டர் சுற்றி செல்ல கூடிய அவல நிலைக்கு ஏற்பட்டுள்ளது.

கோழிகுத்தி கிராமத்திலிருந்து மூவலூருக்கு நாள்தோறும் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருகின்றனர். அவர்கள் சென்று வர பாலம் இல்லாத நிலையில் நீண்ட தூரப் பயணத்தை தவிர்க்க காவிரி ஆற்றின் இடையே உள்ள சட்ரஸ் மேடை மீது ஏறி கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் பயணித்து வருகின்றனர். இதுபோல அவசர தேவைகளுக்கு செல்லக்கூடிய பொது மக்களும் இந்த சட்ரஸ் மேடை மீது ஏறி கடப்பதால் விபத்துக்கள் ஏதேனும் நடந்து விடுமோ என்ற அச்சம் பொது மக்களிடையே இருந்து வருகிறது. எனவே விபத்துகள் நடக்காமல் தவிர்க்கவும் பொதுமக்கள் சிரமமின்றி சென்று வரவும் மூவலூர் கோழிகுத்தி இடையிலான காவிரி ஆற்றுப் பாலத்தை உடனடியாக அமைத்து தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Moowalur ,Mayiladuru , Mayiladuthurai, 3 years, 5 km, students, travel
× RELATED திருவள்ளூர், மயிலாடுதுறையில் 35 நெல்...