×

வினோஜ் பி.செல்வம் மீதான வழக்கு ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும்: போலீசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: இரு பிரிவினரிடையே வெறுப்புணர்வை தூண்டியதாக தமிழக பாஜ இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி.செல்வம் மீது பதிவான வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு காவல்துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
 ஆக்கிரமிப்பு நிலங்களில் உள்ள கோயில்கள் இடிக்கப்படுவது தொடர்பாக தமிழக பாஜ இளைஞர் அணி தலைவரான வினோஜ் பி.செல்வம் அவரது டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். அவரது பதிவு உண்மைக்கு மாறான தகவலுடனும் வதந்தியை பரப்பி, இரு பிரிவினரிடையே வெறுப்பு மற்றும் பகைமையை உருவாக்கி பொது அமைதியை குலைக்கும் வகையில் உள்ளதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த இளங்கோவன் புகார் அளித்திருந்தார். அதில், விசாரணை மேற்கொண்ட சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் க்ரைம் போலீசார், வினோஜ் பி.செல்வம் மீது கலகத்தை ஏற்படுத்துதல், இரு சமூகத்தினர் இடையே விரோதத்தை தூண்டுதல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி வினோஜ் பி.செல்வம் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். செய்தித்தாளில் வந்ததை டிவிட்டரில் பதிவிட்டதாகவும், கைது செய்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் பாஜவிற்கு பிரசாரம் செய்யும் வகையிலேயே பதிவிட்டதாகவும் மனுவில் தெரிவித்திருந்தார். இந்த மனு நீதிபதி ஆர்.பொங்கியப்பன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.சி.பால்கனகராஜ் ஆஜராகி, பத்திரிகையில் வந்த செய்தியையே வினோஜ் டிவிட்டரில் பதிவு செய்துள்ளார் என்றார்.  காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கோயில்கள் மட்டும் இடிக்கப்படுவதாக கூறி மதக்கலவரத்தை தூண்டும் வகையில் கருத்துகளை பதிவு செய்துள்ளார். அரசியலுக்காக மதத்தை பயன்படுத்தியுள்ளார் என்றார்.
இந்த வாதங்களை கேட்ட நீதிபதி, வழக்கு தொடர்பான ஆவணங்களையும், டிவிட்டர் பதிவுகளையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தார்.

Tags : Vinoj P. Selvam ,ICC , On Vinoj P. Selvam Case documents To be filed: Icord order to the police
× RELATED தயாநிதி மாறன் எம்பி தொடர்ந்த அவதூறு...