சென்னை: கோயில்களுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்காக 8 கோயில்கள் மூலம் குங்குமம், விபூதி தயாரித்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 44 ஆயிரம் கோயில்கள் உள்ளன. இதில், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முக்கிய கோயில்கள் அடக்கம். இந்த கோயில்களுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு விபூதி, குங்குமம் தயாரித்து வழங்க அறநிலையத்துறை முடிவு செய்தது.
இது தொடர்பாக சட்டப்பேரவை மானியக்கோரிக்கையின் போது, கோயில்களுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு தரமான திருநீறு மற்றும் குங்கும பிரசாதம் வழங்குவதற்காக 8 கோயில்களில் தயாரித்து பிற கோயில்களுக்கு வழங்க ₹3 கோடி செலவில் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார். இதை தொடர்ந்து, பழனி முருகன் கோயில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில், திருவானைக்காவல் ஜெம்புகேஸ்வரர் கோயில்களில் விபூதிகள் தயாரிக்கப்படுகிறது.
அதே நேரத்தில் மதுரை மீனாட்சியம்மன் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், திருவேற்காடு கருமாரியம்மன் கோயில், பண்ணாரி மாரியம்மன் கோயில்களில் குங்குமம் தயாரிக்கப்படுகிறது. விபூதி மற்றும் குங்குமத்தின் அளவு தொடர்பான விவரங்களை அறிக்கையாக அனுப்பி வைக்க வேண்டும் என்று அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அதில், இணை ஆணையர் மண்டலம், கோயில்களின் எண்ணிக்கை, கோயில் பெயர் பிரதி மாதம் தேவைப்படும் விபூதி மற்றும் குங்குமம் அளவு விவரங்களை தொகுத்து அறிக்கையாக அனுப்பி வைக்க வேண்டும்.