×

பாமக,அதிமுக, அமமுக வேட்பாளர்கள் ‘ஜகா’ வாங்கியதால்: 6 திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு

வேலூர்: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக, பாமக, அமமுக, சுயேச்சை வேட்பாளர்கள் ஜகா வாங்கியதால், வேலூர் மாநகராட்சி உள்பட 6 இடங்களில் திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் திமிரி பேரூராட்சி 13வது வார்டில்  திமுக சார்பில் லோகேஸ்வரி என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவரை  எதிர்த்து சுயேச்சையாக சரஸ்வதி வேட்பு மனு தாக்கல் செய்தார். அதிமுக போட்டியிடவில்லை. இந்நிலையில் சரஸ்வதி தனது மனுவை நேற்று வாபஸ் பெற்றார். இதனால் திமுக வேட்பாளர் லோகேஸ்வரி போட்டியின்றி கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டார்.

ஆற்காடு நகராட்சியில் 25வது வார்டில் திமுக சார்பில் ஆற்காடு எஸ்.எஸ்.எஸ்.கல்லூரி நிர்வாகி ஏ.என்.செல்வம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் கார்த்திக், பாமக சார்பில் அறிவுச்சுடர் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இறுதியாக 3 பேர் மட்டுமே களத்தில் இருந்தனர். இந்நிலையில் நேற்று வேட்புமனு வாபஸ் பெறும் நாளன்று அதிமுக வேட்பாளர் கார்த்திக், பாமக வேட்பாளர் அறிவுச்சுடர் ஆகியோர் திடீரென தங்களது வேட்பு மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டனர். இதனால் திமுக வேட்பாளர் ஏ.என்.செல்வம் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார்.
ஆற்காடு நகராட்சி 17வது வார்டில் திமுக சார்பில் ஆற்காடு வீட்டுவசதி வாரியம் பகுதியைச் சேர்ந்த கீதா நந்தகுமார் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அதேபோல அதிமுக சார்பில் சரஸ்வதி வேட்பு மனு தாக்கல் செய்தார். 2பேர் மட்டுமே களத்தில் இருந்த நிலையில் நேற்று வேட்புமனு வாபஸ் பெறும் நாளன்று அதிமுக வேட்பாளர் சரஸ்வதி திடீரென தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டார். இதனால் திமுக வேட்பாளர் கீதா நந்தகுமார் போட்டியின்றி வெற்றி பெற்றார்.

வேலூர் மாநகராட்சி 1வது மண்டலத்துக்கு உட்பட்ட 7வது வார்டில் திமுக சார்பில் புஷ்பலதா வன்னியராஜா, அதிமுக சார்பில் சந்தியா உட்பட 6 பேர் மனுதாக்கல் செய்தனர். இவற்றில் கடந்த 5ம் தேதி நடந்த மனுகள் பரிசீலனையின்போது சந்தியாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மற்ற 5 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை 10 மணியளவில் மனுக்களை வாபஸ் பெறும் பணி தொடங்கியது. அப்போது 7வது வார்டில் போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்த பாஜக, பாமக, அமமுக, சுயேட்சை உள்பட 4 பேர் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றனர். இதையடுத்து திமுக வேட்பாளர் புஷ்பலதா வன்னியராஜா போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளார். மாநகராட்சி 1வது மண்டலத்தில் ஏற்கனவே 8வது வார்டில் திமுக வேட்பாளர் சுனில்குமார் போட்டியின்றி தேர்வானது குறிப்பிடத்தக்கது.

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 5வது வார்டு அதிமுக வேட்பாளர் பி.புவனேஸ்வரி பிரேம்குமார், மாற்று வேட்பாளருடன் வாபஸ் பெற்றார். அந்த வார்டில் 2 பேர் மட்டுமே களத்தில் இருந்த நிலையில், முன்னாள் திமுக பேரூராட்சி தலைவர் என்.கே.பாபு மனைவி பா.உமாமகேஸ்வரிபாபு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Tags : Bamaka ,Highmuka ,Amamuka ,Dimuka , As BJP, AIADMK and AIADMK candidates bought ‘Jaga’: 6 DMK candidates were selected without contest
× RELATED வணிகர்கள் அவதிப்படுவதால்...