×

ஸ்ரீ பெரும்புதூரில் தேசிய நெடுஞ்சாலை திட்டத்தில் போலி பட்டா மூலம் ரூ.200 கோடி மதிப்பிலான 82 ஏக்கர் அரசு நிலம் மோசடி: சிபிஐ விசாரணைக்கு நில நிர்வாக ஆணையர் பரிந்துரை

சென்னை: சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே 6 வழிப்பாதையாக விரிவாக்கம் செய்யும் பணி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இதற்காக நிலங்களை கையகப்படுத்தும் பணியும் நடந்து வந்தது. கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு இழப்பீட்டு தொகையை தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் மூலமாக வழங்கப்பட்டு வந்தது. இதற்கென மாவட்டத்தில் சிறப்பு வருவாய் அலுவலர் தலைமையில் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் உள்ள நெமிலி ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள பீமன் தாங்கல் கிராமத்தில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் பெரும்பாலும் நிலவரி திட்ட நில பதிவேட்டில் மேய்க்கால் புறம்போக்கு நிலமாக தாக்கல் ஆகியிருந்தது. அதன்பிறகு அரசின் நிலவுடமை மேம்பாட்டு திட்ட பதிவேட்டில் பெரும்பாலான நிலங்கள், தற்போது வரை அரசின் பதிவேட்டில் அனாதீனம் நிலம் என பதிவாகியுள்ளது.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பீமன் தாங்கல் கிராமத்தில், அரசுக்கு சொந்தமான அனாதீனம் நிலத்தை முறைகேடாக அதிகாரிகளின் துணையோடு பலர் பட்டா மாற்றம் செய்துள்ளனர். ஆனால், ஆவணங்களை சரி பார்க்காமல் வேண்டுமென்றே போலி பட்டா வைத்திருந்த சுமார் 70 நபர்களுக்கு நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் ரூ.200 கோடிக்கு மேல் இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது. இதனால் நெடுஞ்சாலை துறைக்கு ரூ.200 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு பகுதியாக பீமன்தாங்கல் கிராமத்தில் 7.5 ஏக்கர் அரசு அனாதீனம் நிலத்தை அப்போதைய ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளின் துணையோடு போலியாக ஆவணம் தயாரித்து பட்டா மாற்றம் செய்து சென்னையை சேர்ந்த ஆசிஸ் மேத்தா என்பவர், நில எடுப்பு இழப்பீட்டு தொகையாக சுமார் ரூ.33 கோடி பெற்றுள்ளார். இது தொடர்பாக தற்போதைய ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் வெங்கடேசன்,  மாவட்ட எஸ்.பியிடம் புகார் கொடுத்தார். அதன்பேரில் அரசு நிலத்தை போலி பட்டா மாற்றம் செய்த சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் நர்மதா உள்ளிட்ட அப்போதைய ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் ராதாகிருஷ்ணன், நிலவரி திட்ட உதவி அலுவலர் சண்முகம், ஆசிஸ் மேத்தா, செல்வம் உள்ளிட்ட 8 பேர் மீது 7 பிரிவுகளில்  வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ விரிவாக விசாரிக்க  நில நிர்வாக ஆணையர், தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையத்துக்கு பரிந்துரை செய்துள்ளார்.* நில உரிமையாளர்கள் கதி என்ன?பீமன் தாங்கல் கிராமத்தில் 82 ஏக்கர் அரசு நிலத்தை பலர் போலியாக பட்டா மாற்றம் செய்திருப்பது மாவட்ட நிர்வாகத்தை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. இதையடுத்து 82 ஏக்கர் போலி பட்டாவை மாவட்ட நிர்வாகம் முழுவதும் ரத்து செய்துள்ளது. இதனால் அப்பகுதியில் வீடு வாங்கிய பொதுமக்களின் நிலை தற்போது கேள்விக்குறியாக உள்ளது. எனவே, சொத்துகள் வாங்கும் போது அதில் பிரச்னை உள்ளதா என்பதை அறிய வில்லங்க சான்றிதழை குறைந்தபட்சம் 30 ஆண்டுகளுக்காவது சரி பார்த்து விட வேண்டும். தாய் பத்திரத்தில் இருந்து நாம் யாரிடம் நிலம் வாங்குகிறோமோ அதுவரை உள்ள அனைத்து பத்திரங்களையும் நாம் சரி பார்த்து கொள்வது தற்போதைய காலத்தின் கட்டாயமாக உள்ளது….

The post ஸ்ரீ பெரும்புதூரில் தேசிய நெடுஞ்சாலை திட்டத்தில் போலி பட்டா மூலம் ரூ.200 கோடி மதிப்பிலான 82 ஏக்கர் அரசு நிலம் மோசடி: சிபிஐ விசாரணைக்கு நில நிர்வாக ஆணையர் பரிந்துரை appeared first on Dinakaran.

Tags : Sri Mutham ,Land Administrative Commission ,CPI ,Chennai ,Chennai- ,Bangalore National Highway ,6 route ,Kanchipuram District Sripurudur ,Sri ,Dinakaran ,
× RELATED டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைதான...