×

இந்தியா-சீனா எல்லை பிரச்னையில் யாரும் தலையிடக் கூடாது: ரஷ்ய அதிபர் புடின் பேட்டி

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்: ‘மோடியும், ஜின்பிங்கும் பொறுப்பான தலைவர்கள். அவர்களே, இந்தியா, சீனா இடையேயான பிரச்னையை தீர்த்துக் கொள்வார்கள். அதில் வேறெந்த 3வது நாடும் தலையிடக் கூடாது’ என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறி உள்ளார். கடந்த ஆண்டு லடாக் கல்வான் பகுதியில் நடந்த மோதலைத் தொடர்ந்து இந்தியா- சீனா இடையேயான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. சீனாவுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதோடு, சீனாவின் ஆதிக்கத்தை தடுக்க இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா இணைந்து குவாட் எனும் அமைப்பை உருவாக்கி, அதில் மேலும் பல நாடுகளை ஒன்று திரட்டி வருகின்றன. குவாட் அமைப்பிற்கு வெளிப்படையாக ரஷ்யா எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புடின் அளித்த சிறப்பு பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது: எந்தவொரு நாடும் எந்தவொரு முயற்சியிலும் எந்த அளவுக்கு பங்கேற்க வேண்டும், எவ்வாறு பங்கேற்க வேண்டும், மற்ற நாடுகளுடன் தங்கள் உறவை எப்படி வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை ரஷ்யா தீர்மானிக்க முடியாது. ஆனால், எந்தவொரு கூட்டணியும், யாருக்கும் எதிராக நட்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டிருக்கக் கூடாது. இந்தியா, சீனா உறவில் சில சிக்கல்கள் இருப்பதை நாங்கள் அறிவோம். அண்டை நாடுகளுக்கு இடையே எப்போதும் பிரச்னைகள் இருப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால், இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங்கின் அணுகுமுறையை நான் அறிவேன். இருவரும் பொறுப்பான தலைவர்கள். ஒருவரை ஒருவர் மிகுந்த மரியாதையுடன் நடத்துபவர்கள். எனவே, அவர்கள் எதிர்கொள்ளும் எந்தவொரு பிரச்னைக்கும் அவர்களே தீர்வு காண்பார்கள் என்று நம்புகிறேன். அதில் வேறு எந்த பிராந்திய சக்தியும் தலையிடக் கூடாது என்பது முக்கியமானது. இந்தியா, சீனா இடையேயான பிரச்னையால் அவ்விரு நாடுகளுக்கு இடையேயான ரஷ்யாவின் உறவில் எந்த முரண்பாடுகளும் ஏற்படவில்லை. இந்தியா உடனான எங்கள் உறவு வேகமாக வளர்ந்து வருகிறது. அது நம்பிக்கையை அடிப்படையாக கொண்டது. இந்திய நண்பர்களுடன் உள்ள உயர்ந்த ஒத்துழைப்பை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம். மேம்பட்ட ஆயுத கட்டமைப்புகள், தொழில்நுட்பங்களை விரிவாக்குவதிலும், உற்பத்தி செய்வதிலும் நாங்கள் இணைந்து செயல்படுகிறோம். எங்களின் கூட்டு ஒத்துழைப்பு என்றும் ஓயாது. அது பன்முகத்தன்மை கொண்டது. இவ்வாறு புடின் கூறினார்.* ஜோ பைடனுடன் முதல் சந்திப்பு எப்படியிருக்கும்?  அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பிறகு, ஜெனீவாவில் வரும் 16ம் தேதி  அவரை முதல் முறையாக புடின் சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பு குறித்து புடின் கூறுகையில், ‘‘இந்த சந்திப்பில் எந்த முன்னேற்றமும் இருக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. அமெரிக்கா- ரஷ்யா உறவில் விரிசல் ஏற்பட நாங்கள் காரணமில்லை. அதில், முதல் அடியை எடுத்து வைத்தது அமெரிக்கா தான். அவர்கள் தான் எந்த அடிப்படையும், நோக்கமும் இல்லாமல் எங்கள் மீது பொருளாதார தடைகளை விதித்தனர்,’’ என்றார்….

The post இந்தியா-சீனா எல்லை பிரச்னையில் யாரும் தலையிடக் கூடாது: ரஷ்ய அதிபர் புடின் பேட்டி appeared first on Dinakaran.

Tags : India ,China ,President ,Putin ,St Petersburg ,Modi ,Xi Jinping ,Dinakaran ,
× RELATED பாகிஸ்தான், சீனாவுக்கு இந்தியா கண்டனம்