×

தமிழ் பரப்புரைக் கழகம் உருவாக்க ரூ.1 கோடி ஒதுக்கீடு; அரசாணை வெளியீடு

சென்னை: அயல்நாடு மற்றும் வெளிமாநிலங்களில் வாழும் தமிழர்களுக்குத் தமிழ் கற்பிக்க தமிழ் இணையவழிக் கல்விக் கழகம் மூலம் தமிழ் பரப்புரைக் கழகம் உருவாக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்தும் தமிழக அரசு வெளியிட்ட அரசாணை:
சட்டமன்றப் பேரவையில் 31.8.2021 அன்று நடைபெற்ற தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-22ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், உலகில் சுமார் 94 நாடுகளில் தமிழர்கள் வசிக்கின்றனர். அந்நாடுகளில் அவர்கள் தமிழை அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்வதில் சிக்கல்கள் உள்ளன. கற்பதற்கான வசதிகள் இல்லாமை, தமிழறிந்த ஆசிரியர்கள் இல்லாமை, தேவையான தமிழ்ப் பாடநூல்கள் இல்லாமை என இருக்கும் சிக்கல்களை களைய நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ் மொழியை இரண்டாம் மற்றும் மூன்றாம் மொழிகளாக கற்பிக்க தமிழ் பரப்புரைக் கழகம் உருவாக்கப்படும். இதற்கான தொடர் செலவினமாக ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என  தொழில்துறை அமைச்சர் அறிவித்தார்.

எனவே, தமிழ் இணையக் கல்விக் கழகத்திலிருந்து தமிழ்ப் பரப்புரை கழகம் நிறுவி அதன் வாயிலாக தமிழ் மொழியின் பன்பாடு மற்றும் கலாச்சாரப் பரப்புரைப் பணிகள், ஒலி-ஒளி உச்சரிப்புடன் பாடபுத்தகம் வடிவமைத்தல், தமிழ் கற்பதற்கான வசதிகள் ஏற்படுத்துதல் இணையத்தில் தமிழ் ஆசிரியர்கள் மூலம் கற்றுத்தருதல், தமிழை வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் கற்பிக்கும் அமைப்புகளுக்கு நிதியுதவி வழங்குதல், பயிற்சி பெற்ற ஆசிரியர்களை அனுப்பி வைத்தல் ஆகிய செயல்பாடுகள் மேற்கொள்ளலாம் என தமிழ் வளர்ச்சி இயக்குநர் தெரிவித்துள்ளார். எனவே, அரசின் கவனமான பரிசீலனைக்குப் பின்னர், தமிழ் வளர்ச்சி இயக்குநரின் பரிந்துரையின் அடிப்படையில், தமிழ் இணையவழிக் கல்விக் கழகத்திலிருந்து தமிழ் பரப்புரைக் கழகம் நிறுவி, அதன் வாயிலாக தமிழ் மொழியின் பண்பாடு மற்றும் கலாச்சார பரப்புரைப் பணிகளை வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் பணிகள் மேற்கொள்ள தொடர் செலவினமாக ரூ.1 கோடி நிதி ஒப்பளிப்பு செய்து ஆணையிடுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


Tags : Tamil Blocking Corporation , Rs 1 crore allocated to set up a Tamil Propaganda Corporation; Government Publication
× RELATED சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக...