×

இருளில் மூழ்குவதால் மாரியூர் கடற்கரை பகுதியில் உயர்கோபுர மின் விளக்கு: பொதுமக்கள் வலியுறுத்தல்

சாயல்குடி:  மாரியூர் கடற்கரையில் பெண்கள் உடைமாற்றும் அறை, உயர்கோபுர மின் விளக்கு அமைக்க வேண்டும் என பொதுமக்கள்,மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலாடி அருகே மாரியூர் கிராமத்தில் பழங்கால சிவன் கோயிலான பவளநிற வள்ளியம்மன் சமேத பூவேந்தியநாதர் கோயில் உள்ளது. மாவட்டத்தில் ராமேஸ்வரம், சேதுக்கரை, தேவிபட்டிணம் ஆகிய புனித தீர்த்த கடற்கரைகளுக்கு அடுத்தப்படியாக மாரியூர் தீர்த்த கடற்கரை விளங்குகிறது. இங்கு கடலாடி, கமுதி, முதுகுளத்தூர், பரமக்குடி தாலுகா மற்றும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் விரதக் காலங்கள், கோயில்களுக்கு மாலையிடுதல் மற்றும் முன்னோர்களுக்கு சடங்குகள் செய்தல், பல்வேறு தோஷங்களுக்கு பரிகார பூஜைகள் உள்ளிட்ட பல்வேறு சடங்குகளை செய்ய இந்த கடற்கரைக்கு வந்து நீராடி வருகின்றனர்.

கடற்கரைக்கு வரும் பெண்கள் வசதிக்காக கடந்த 2010ம் ஆண்டு பெண்கள் உடை மாற்றும் அறை கட்டப்பட்டது. போதிய பராமரிப்பின்றி அவை சேதமடைந்து கிடப்பதால் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் பெண்கள் மிகவும் சிரமப்படுவதாக கூறுகின்றனர். இதனைபோன்று மாரியூர், காந்தி நகர், கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட இப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். 30க்கும் மேற்பட்ட நாட்டு படகுகளில் சென்று மீன்பிடித்து வருகின்றனர். அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் கடலுக்குள் சென்று வருகின்றனர். கலங்கரை விளக்கம் இல்லாததால் மீன்பிடிக்க வந்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.

கடலுக்கு செல்லாத மீனவ குடும்பத்தினர், முதியோர், பெண்கள் கடற்கரையில் வலை உலர்த்துதல், வலையை சீரமைத்தல், மீன், கருவாடு காயப்போடுதல், தடையில்லாத சங்குகளை சேகரித்து, சீரமைத்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதிகாலை முதல் காலை 9 மணி வரையிலும் கடல்கரை வேலையை பார்த்துவிட்டு, மற்ற நேரங்களில் நூறுநாள் வேலைக்கு செல்லுதல் உள்ளிட்ட பிற கூலி வேலைக்கு சென்றுவிட்டு, மாலை வீடு திரும்பி சமையல் வேலைகளை முடித்து விட்டு, மீண்டும் மாலையில் கடற்கரைக்கு வேலையை வருகின்றனர். இரவு நேரம் ஆகி விடுவதால் வெளிச்சம் இன்றி அவதிப்படுவதாக கூறுகின்றனர். எனவே மாரியூர் கடற்கரையில் பெண்கள் உடை மாற்றும் அறை மற்றும் உயர்கோபுர மின்விளக்கு அமைத்து தரவேண்டும் என பொதுமக்கள், மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Mariyur Beach , Tower electric light at Mariur Beach as darkness falls: Public insistence
× RELATED பல ஆண்டுகளாக மின்கட்டணம் பாக்கி;...