×

ஒரே நாடு, ஒரே பதிவு, மன ஆரோக்கிய திட்டம், கிராமங்களிலும் சார்ஜிங் நிலையங்கள்: ஒன்றிய பட்ஜெட் 2022 முழு விவரம்!!

டெல்லி : இந்தியாவின் முதல் டிஜிட்டல் கரன்சி, மொபைலில் 5ஜி சேவை, ஒரே நாடு, ஒரே பதிவு, இ பாஸ்போர்ட் என பல முக்கிய திட்டங்கள் 2022-23ம் நிதியாண்டிற்கான ஒன்றிய பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளது.  நாடாளுமன்றத்தில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிகழ்ச்சியை பட்ஜெட் உரையின் முழு விவரம் :

*கொரோனா காலத்திலும் நாட்டின் பொருளாதாரம் முன்னேறி வருகிறது. தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்தியதால் கொரோனா பாதிப்பு குறைவாகவே உள்ளது.ஏழைகள், நடுத்தர மக்களின் முன்னேற்றத்திற்காக ஒன்றிய அரசு செயலாற்றி வருகிறது.உலகில் உள்ள பெரிய நாடுகளில் இந்தியாவின் பொருளாதாரம்தான் அதிக வேகத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது.

*நடப்பாண்டில் பொருளாதார வளர்ச்சி 9.2% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. நடுத்தர வகுப்பினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் நிதித்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.சிறு, குறு, நடுத்தர தொழிற்துறையினரை மேம்படுத்தும் வகையில் புதிய வரி விதிப்புகள் இருக்காது. அடுத்த 25 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை இலக்காகக் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

*ஏழைகளுக்கு அனைத்து வாய்ப்புகளையும் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளில் 60 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.  புதிய இந்தியாவை கட்டமைப்பதற்கான பட்ஜெட்டாக நடப்பாண்டின் பட்ஜெட் இருக்கும். ஒருங்கிணைந்த வளர்ச்சியை கருத்தில் கொண்டு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

*எல்ஐசி நிறுவனத்தின் பொது பங்குகள் விரைவில் வெளியிடப்படும்.உற்பத்திக்கான ஊக்கத்தொகைத் திட்டம் நல்ல பலனை அளித்து வருகிறது.

*One station, One product திட்டம் உள்ளூர் வணிகத்திற்கு உதவியாக இருக்கும், பொருட்கள் விநியோக பாதையை மேம்படுத்தும்

*நாட்டின் தேசிய நெடுஞ்சாலை வரும் நிதியாண்டில் 25,000 கி.மீ. தொலைவுக்கு புதிதாக அமைக்கப்படவுள்ளது. போக்குவரத்து உட்கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.20,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

*400 புதிய வந்தே பாரத் ரயில்கள் அடுத்த 3 ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும்; 100 சரக்கு முனையங்கள் அமைக்கப்படும். ரயில் நிலையங்களையும் நகர்ப்புற மெட்ரோக்களையும் இணைக்க பெரிய அளவில் திட்டம் வகுக்கப்படும்.1சரக்குப் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் சாலை, ரயில் கப்பல் போக்குவரத்துகள் இணைக்கப்படும். மெட்ரோ ரயில் திட்டங்கள் புதிய வசதிகளுடன் மேம்படுத்தப்படும்...

*நாடு முழுவதும் ரசாயன உரங்களின் பங்களிப்பு இல்லா இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படும். விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை

*உள்நாட்டில் எண்ணெய் வித்துகள் உற்பத்தி அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டில் 1.63 கோடி விவசாயிகளிடம் இருந்து தானியங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன

*இயற்கை விவசாய முறையில் விளைவிக்கப்படும் பொருட்களை மதிப்புக்கூட்டி விற்க நடவடிக்கை எடுக்கப்படும். புதிய ஊரக தொழில் மற்றும் வேளாண் நிறுவனங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

*வேளாண் பொருட்களுக்கு ரூ.2.73 லட்சம் கோடி குறைந்தபட்ச ஆதரவு விலையாக வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளிடம் இருந்து விளைபொருட்களை கொள்முதல் செய்யும் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது. வேளாண் ஏற்றுமதிக்கு ரயில்வே துறையை திறம்பட செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.சிறுகுறு தொழிலாளர்கள் மற்றும் சிறு விவசாயிகளுக்கான புதிய பொருட்களை ரயில்வே தயாரிக்கும்.
                                         
*கிருஷ்ணா நதி - பெண்ணாறு - காவிரி நதி நீர் இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். காவிரி-கிருஷ்ணா நதிநீர் இணைப்புத் திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது.ஆத்மநிர்பர் பாரத் என்ற தற்சார்பு இந்தியா திட்டம் பெரியளவில் வளர்ச்சியை கண்டுள்ளது.ரூ.44 ஆயிரம் கோடியில் நீர்ப்பாசன திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

*அவசர கால கடன் உதவி திட்டங்கள் மூலம் 1.30 கோடி சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பலன் பெற்றுள்ளன.
சிறு, குறு தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க வழங்கப்படும் அவசர கால கடன் உதவி திட்டம் 2023 மார்ச் வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது,

*சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அவசர கால கடன் வழங்க ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. சிறு, குறு, தொழில் நிறுவனங்களின் கடன் உத்தரவாத திட்டத்திற்கு கூடுதலாக 50 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடப்பட்டுள்ளது.

*ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் இணைப்பு திட்டத்தின்கீழ் 60,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது;  3.8 கோடி இல்லங்களுக்கு இணைப்பு வழங்கப்படவுள்ளது.

*வேளாண் நிலங்களை அளவீடு செய்ய டிரோன்களை பயன்படுத்த அனுமதிக்கப்படும். நாடு முழுவதும் 2 லட்சம் அங்கன்வாடி மையங்கள் மேம்படுத்தப்படும்.

* நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த சாலை, ரயில்வே, விமான நிலையங்கள், துறைமுகங்கள், நீர்வழித்தடங்கள், பொது போக்குவரத்து, சரக்கு போக்குவரத்து ஆகிய 7 முக்கிய துறைகளை உள்ளடக்கிய பிரதமரின் கதி சக்தி திட்டம் செயல்படுத்தப்படும்.

*பிரதமரின் இ-வித்யா திட்டத்தின் மூலமாக ஒரு வகுப்பு, ஒரு சேனல் என்ற வகையில் 200 டிவி சேனல்கள் புதிதாக உருவாக்கப்படும். 2 ஆண்டுகளாக பள்ளிகள் செயல்படாததால் கற்பதில் ஏற்பட்ட பாதிப்பை சீர் செய்ய இந்த திட்டம் உதவும். 1 முதல் 12ம் வகுப்பு வரை மாநில மொழிக் கல்வி ஊக்குவிக்கப்படும்.மாணவர்களுக்கு அனிமேஷன், VFX, டிஜிட்டல் விளையாட்டுகள் தயாரிப்பு ஆகியவற்றில் திறனை மேம்படுத்த திட்டங்களை வடிவமைக்க சிறப்புக்குழு அமைக்கப்படும்.

*மகளிருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சகி இயக்கம்,வாத்சல்யா இயக்கம்,  ஊட்டச்சத்து 2.0 இயக்கம் ஆகிய 3 திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

* பள்ளி கல்வி துறையில் டிஜிட்டல் முறையில் கற்பிக்க கூடுதல் வசதி ஏற்படுத்தும் வகையில் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் டிஜிட்டல் பல்கலைக்கழகங்கள் நிறுவப்படும்.

*பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 18 லட்சம் வீடுகள் கட்ட ரூ.48,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 2023ம் ஆண்டுக்குள் 18 லட்சம் வீடுகள், குறைந்த விலையில் கட்டப்படும்.

*எல்லையோர கிராமங்கள், திறன்மிக்க கிராமங்களாக நவீன நுட்பத்துடன் தரம் உயர்த்தப்படும்.
பின்தங்கிய மாவட்டங்களின் வளர்ச்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

*டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அஞ்சலகஅலுவலக கணக்கிலிருந்து வங்கி கணக்குக்கு ஆன்லைன் பணப்பரிமாற்றத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

*5 லட்சம் அஞ்சல் நிலையங்கள் மின்னணு முறையில் இணைக்கப்பட்டு, பணப் பரிமாற்றத்திற்கு உதவும் வகையில் மேம்படுத்தப்படும்

*அஞ்சலக துறையை, வங்கிகள் துறையோடு இணைக்க ரூ.15,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மேலும் 1.5 லட்சம் அஞ்சலக வங்கிகள் இணையதளம் மூலம் இணைக்கப்படும்

*மணிப்பூர், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

*நாட்டில் 75 மாவட்டங்களில் பரிட்சார்த்த முயற்சியாக இ-பேங்கிங் அறிமுகம் செய்யப்படும்

*மின்சார வாகனங்களுக்காக ஊரகப்பகுதிகளில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும்.எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரிகளை மாற்றிக் கொள்ளும் வசதி கொண்டுவரப்படும்.மின்சார வாகனங்களின் திறனை மேம்படுத்துவதற்கு தேவையான கட்டமைப்பை உருவாக்கவும், வாகனங்கள் மற்றும் மின்கலன்கள் வர்த்தகம் மற்றும் சேவையில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்கவும் திட்டம் வகுக்கப்படும்.

*ஏர் இந்தியா பங்குகள் விற்பனை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது

*சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட் திட்டம், வரும் நிதியாண்டில் அறிமுகம் செய்யப்படும்.5ஜி மொபைல் சேவைகள் வரும் நிதியாண்டில் கொண்டுவரப்படும்.

*நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் பத்திரப்பதிவுகளை மேற்கொள்ள  ஒரே நாடு, ஒரே பதிவு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். One Nation, One Registration திட்டத்திற்காக, மாநில பதிவு தரவுகள் ஒரே குடையின் கீழ் இணைக்கப்படும். நில ஆவணங்களை மின்னணு முறையில் ஆவணப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

*மத்திய அமைச்சகங்களில் காகிதமில்லா இ.பில் திட்டம் செயல்படுத்தப்படும். மத்திய அமைச்சகங்களில் காகித பயன்பாட்டை முற்றாக குறைக்க இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


*புதிய சட்டத் திருத்தங்கள் உடன் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மாற்றியமைக்கப்படும்.


*நாட்டின் சுற்றுலா துறையை மேம்படுத்த 5 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்

*நடப்பாண்டிலேயே 5ஜி தொலைத்தொடர்பு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
சூழல் பாதுகாப்புடன் 5ஜி தொலைத்தொடர்பு திட்டம் செயல்படுத்தப்படும் என உறுதி அளிக்கிறோம்.
நடப்பாண்டிற்குள் 5ஜி அலைக்கற்றை ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படும்.

*2023ஆம் ஆண்டிற்குள் 2 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிற்கு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படும். நாட்டின் ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புத்துறைகளின் ஆராய்ச்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

*ராணுவத்திற்கான பட்ஜெட் மதிப்பில் 25% நிதி பாதுகாப்புத்துறை ஆராய்ச்சிக்காக ஒதுக்கீடு செய்யப்படும். நாட்டில் சோலார் திட்டங்களை ஊக்குவிக்கும் வகையில் 19 ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

*ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவில் ஸ்டார் அப் நிறுவனங்கள் தொடங்க அனுமதி வழங்கப்படுகிறது. உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் 68% ராணுவ தளவாடங்களை இந்தியாவில் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

*நாட்டின் மூலதன செலவினம் கடந்தாண்டை விட 35.40%ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் நுகர்வை அதிகரிக்க, அரசின் மூலதன செலவினத்திற்கு ரூ.7.50 லட்சம் கோடி ஒதுக்கீடு.

*பாரத் நெட் திட்டத்தின் கீழ் 2025ஆம் ஆண்டுக்குள் அனைத்து கிராமங்களிலும் இண்டர்நெட் சேவை

*சர்வதேச தீர்வு மையம்தொழில்கள் தொடர்பான பிரச்சினைகளை, விவகாரங்களை தீர்த்து வைக்க சர்வதேச தீர்வு மையம் ஏற்படுத்தப்படும்

*வரும் நிதியாண்டில் ஆர்பிஐ மூலம் டிஜிட்டல் கரன்சி அறிமுகம் செய்யப்படும். இந்திய பண மதிப்பான ரூபாய் மதிப்பீட்டில் டிஜிட்டல் கரன்சி அறிமுகம் செய்யப்படும்.. டிஜிட்டல் பணத்திற்கு என்று புதிய மத்திய வங்கி ஏற்படுத்தப்படும்.பிட்காயின் போன்ற டிஜிட்டல் சொத்துகள் மூலம் ஈட்டப்படும் வருவாய்க்கு 30% வரி விதிக்கப்படும்

*மன அழுத்தத்தை குறைக்க தொலைபேசி மூலம் ஆலோசனை வழங்கும் மன ஆரோக்கிய திட்டத்திற்கு அனுமதி வழங்கப்படும். மனநல ஆலோசனைக்கு, தேசிய தொலைதூர மனநல திட்டம் தொடங்கப்படும்.

*மாநில அரசுகளின் முதலீட்டுத் திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மாநில அரசுகளுக்கான கூடுதல் நிதி அளவு ரூ.15,000 கோடியாக அதிகரிக்கப்படும்.

*மாநிலங்களுக்கு 3 ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடி மூலதன கடனாக வழங்கப்படும்வரும் நிதியாண்டின் கணக்குப் பற்றாக்குறை 6.4%ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 2025-2026ஆம் நிதியாண்டிற்குள் கணக்கு பற்றாக்குறையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.             

*5 உயர்கல்வி நிறுவனங்களை தரம் உயர்த்த ரூ.1250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.திருத்தப்பட்ட வருமான வரி கணக்கை தாக்கல் செய்வோருக்கு 2 ஆண்டுகள் அவகாசம். கூடுதல் வருமானத்தை கணக்கில் காட்டி கூடுதல் வரி செலுத்த விரும்புவோருக்கு திருத்தப்பட்ட கணக்கு தாக்கல் வசதி அளிக்கப்பட்டுள்ளது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான வரிச்சலுகை அடுத்தாண்டு மார்ச் வரையில் நீட்டிப்பு. வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இல்லை.

*குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பன்னாட்டு நிதி தீர்ப்பாயம் அமைக்கப்படும்.நிலக்கரியில் இருந்து எரிவாயு மற்றும் ரசாயனம் உற்பத்தி செய்ய 4 புதிய தொழிற்சாலைகள்

*திவாலான நிறுவனங்களை மூட கால அவகாசம் 2 வருடங்களில் இருந்து 6 மாதமாக குறைக்கப்படும்

*மலைவாழ் மக்களுக்கு போக்குவரத்தை எளிதாக்க பர்வத்மாலா திட்டம்.எளிதாக தொழில் தொடங்க சூழல் 2.0 திட்டம் துவங்கப்படும்.உற்பத்தி துறையில் ஒற்றை சாளர முறையில் அனைத்திற்கும் அனுமதி வழங்கப்படுகிறது.

*மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கு பிஎஃப் வரிச்சலுகை வழங்கப்படும்.தேசிய ஓய்வூதிய திட்டத்திற்கு மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் அளவு 10%-ல் இருந்து 14%-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மொபைல் உள்ளிட்ட மின்னணு பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களுக்கு இறக்குமதி வரியை 7.5 சதவீதமாக குறைக்க முடிவு ஈதுல் எடுக்கப்பட்டுள்ளது.

*கூட்டுறவு சங்கங்கள் செலுத்தும் வரி 18%லிருந்து 15%ஆக குறைக்கப்படும். கூட்டுறவு சங்கங்கள் செலுத்தும் கூடுதல் வரியில் 5% குறைக்கப்படும்.குடைகள் மீதான வரி 20 சதவீதம் உயர்த்தப்படும் .

*விர்ச்சுவல் மூலதன சொத்துகள் மீதான வரியில் 1% TDS வழங்கப்படும். பங்குகள் மூலமான வருமானத்திற்கு பெறப்படும் மூலதன ஆதாய வரியில் கூடுதல் வரி 15%ஆக இருக்கும்

*2022 ஜனவரி மாதத்தில், ஜிஎஸ்டி மூலம் ரூ.1.40 லட்சம் கோடி வரி வருவாய் கிடைத்துள்ளது. பெருந்தொற்று காலத்திலும் ஜிஎஸ்டி மூலம் கிடைக்கும் வரி வருவாய் நன்றாக வளர்ச்சி அடைந்துள்ளது. இதுவரை இல்லாத வகையில் கடந்த ஜனவரியில் ஜிஎஸ்டி வரி வருவாய் அதிகரித்துள்ளது. பெருநிறுவங்களுக்கான வரி 12%லிருந்து 7%ஆக குறைக்கப்பட்டுள்ளது.

*வெட்டப்பட்ட மற்றும் பாலிஷ் செய்யப்பட்ட வைரங்கள், ஆபரண கற்களுக்கான சுங்கவரி 5% ஆக குறைக்கப்படும்.. மாற்றுத் திறனாளி குழந்தைகளை பராமரிக்கும் பெற்றோருக்கு வருமான வரியில் புதிய சலுகை வழங்கப்படும்


*ஆடை தயாரிப்பு, தோல் பொருட்கள் தயாரிப்பு உபகரணங்களுக்கு வரி குறைக்கப்படுகிறது. உள்நாட்டு தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வரும் வரிச்சலுகைகள் மார்ச் 2023 வரை நீட்டிப்பு.இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் வேளாண் உபகரணங்களுக்கு வரி குறைப்பு.


இறுதியாக நாடாளுமன்றத்தில் 1.30 மணி நேர பட்ஜெட் உரையை வாசித்து நிறைவு செய்தார் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!!

Tags : ஒரு வகுப்பு; ஒரு சேனல், இ-பாஸ்போர்ட் , மொபைலில் 5ஜி சேவை, டிஜிட்டல் கரன்சி, ஒன்றிய பட்ஜெட்
× RELATED தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரையில் 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவு