×

கூடுவாஞ்சேரி அருகே பரபரப்பு; கிணத்தக் காணோம்: வடிவேல் காமெடி பாணியில் பொதுமக்கள் புகார்

கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே ரூ.9.5 லட்சம் செலவில் தரமற்ற முறையில் கட்டப்பட்ட கிணறு இடிந்து விழுந்து மாயமானது. வடிவேல் ஒரு படத்தில் கிணறு வெட்டுவதற்கு லோன் வாங்கிக்கொண்டு கிணறை வெட்டாமல் இருப்பார். அதிகாரிகளிடம் லஞ்சம் கொடுத்து வெட்டாத கிணறுக்கு வெட்டியதைப்போல ரசீதை பெற்றுக்கொண்டு அதன் மூலம் கிணற்றை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் கொடுப்பார். அப்போது காவல் அதிகாரியாக இருக்கும் நெல்லை சிவா கிணற்றை காணவில்லை என்று வழக்கா, ‘‘இந்த வேலையே தேவையில்லை’’ என்று ராஜினாமா செய்துவிட்ட சென்றுவிடுவார் . இது, மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ஒரு காமெடி. அதுபோலவே, செங்கல்பட்டு மாவட்டத்தில் கிணறு ஒன்று காணாமல் போயுள்ளது.கூடுவாஞ்சேரி அருகே உள்ள பெருமாட்டுநல்லூர் ஊராட்சியில் கடந்த அதிமுக ஆட்சியின்போது (2015 – 16) குடிநீர் பயன்பாட்டிற்காக கிணறு அமைக்க ரூ.9.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இதன் மூலம் பெருமாட்டூர் கிராம ஏரிக்கரையில் தரை கிணறு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த  கிணற்றில் இருந்து மோட்டார் மூலம் குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு கிராம மக்களுக்கு  குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது . அந்த கிராமத்தில் குடியிருக்கும் 350 குடும்பங்களுக்கு இந்த கிணறு பயனுள்ளதாக இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென்று அந்தக் கிணறு முழுவதும் சரிந்து விழுந்தது.  கான்கிரீட்டால் போடப்பட்டிருந்த மூடியும் உடைந்து அந்த கிணற்றுக்குள் விழுந்து மூழ்கியது.  இதனால், குடிநீருக்காக பயன்படுத்தப்பட்ட  கிணறு இப்போது குட்டைபோல் காட்சியளிக்கிறது. இதனால், குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமம் அனுபவித்து வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில் கிட்டதட்ட பத்து லட்சம் ரூபாய் செலவு செய்து இந்த கிணறு அமைக்கப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்புதான் இந்த கிணறு மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. அதற்க முன்பு குடிநீருக்காக நாங்கள் நீண்ட தொலைவு சென்று தண்ணீர் கொண்டு வர வேண்டிய நிலையில் இருந்தோம். இந்த கிணறு அமைக்கப்பட்டதால் கிராமத்தில் உள்ள  350க்கும் மேற்பட்ட குடும்பத்தினரும்  தண்ணீர் பஞ்சம் இல்லாமல் இருந்து வந்தோம். தரமற்ற முறையில் இந்தக் கிணறு அமைக்கப்பட்டதால்  5 ஆண்டுகளில் முழுவதுமாக இடிந்து விழுந்து காணாமல் போய்விட்டது.  இதுகுறித்து, அரசு  உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இல்லையென்றால் எங்களுக்கு பெரிய அளவில் குடிநீர் பிரச்னை ஏற்படும் என்றனர். தரமான முறையில் கட்டப்படும் கிணறுகள் பல தலைமுறைகளை தாண்டி பயன்பாட்டில் இருந்துவரும் நிலையில்,  ஒதுக்கப்படும் நிதியில் பெரிய அளவில் லாபம் சம்பாதித்துவிட்டு குறைந்த தொகையில்  தரமற்ற முறையில் கட்டப்படும் கிணறுகள் வடிவேல் பாணியில் காணாமல் போய்விடுகின்றன….

The post கூடுவாஞ்சேரி அருகே பரபரப்பு; கிணத்தக் காணோம்: வடிவேல் காமெடி பாணியில் பொதுமக்கள் புகார் appeared first on Dinakaran.

Tags : Kootuwancheri ,Gooduwancheri ,Chengalpattu ,Gootuwancheri ,
× RELATED செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்து...