×

சேத்துப்பட்டு மார்க்கெட் கமிட்டியில் கூலி உயர்வு கேட்டு தொழிலாளர்கள் 4வது நாளாக வேலை நிறுத்தம்-5 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்கம்

சேத்துப்பட்டு : சேத்துப்பட்டு மார்க்கெட் கமிட்டியில் கூலி உயர்வு கேட்டு தொழிலாளர்கள்  4வது நாளாக வேலை நிறுத்தம் செய்தனர். இதனால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேங்கியுள்ளது.திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், நெல் கொள்முதல் செய்வதில் தமிழகத்திலேயே இரண்டாவது இடத்திலும், மாவட்டத்தில் முதல் இடத்திலும் உள்ளது. இங்கு விவசாய விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதால் விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் விளைபொருட்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

இதனால் இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு தினமும் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையிலான நெல் மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.
 தினமும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால் வியாபாரிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே கூலி வழங்குவது தொடர்பாக தொடர்ந்து பிரச்னை இருந்து வந்தது.

இந்நிலையில், தொழிலாளர்கள் தற்போது பை மாற்ற ₹8, மூட்டைகளை லாரியில் ஏற்ற ஒரு மூட்டைக்கு ₹8, மூட்டைகளை அடுக்கிவைக்க ஒரு மூட்டைக்கு ₹5 என பெற்று வருகின்றனர். இந்த கூலியை உயர்த்தி தருமாறும், மொத்தமாக ₹4 உயர்த்தி தருமாறு தொழிலாளர்கள் கோரிக்கை வைத்தனர். இதற்கு நெல் கொள்முதல் செய்யும் ஏஜென்டுகள், தங்களுடைய உரிமையாளர்களிடம் கேட்டுத்தான் தரமுடியும். மற்ற மார்க்கெட் கமிட்டிகளைவிட இந்த கமிட்டியில் வழங்கப்படும் கூலி அதிகமாக உள்ளது என தெரிவித்தனர்.

இதனால் கடந்த திங்கட்கிழமை முதல் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். நேற்று 4வது நாளாக தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இதன்காரணமாக குடோன்களில் நெல் கொள்முதல் செய்யப்படவில்லை. இதனால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் கமிட்டியில் தேங்கிக் கிடக்கிறது. இதுகுறித்து அதிகாரிகள், வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்களிடம் பேசி நிரந்தர முடிவை ஏற்படுத்த வேண்டும். நெல் கொள்முதல் செய்யாததால் தங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. எனவே இப்பிரச்னைக்கு அதிகாரிகள் உடனடியாக தீர்வு காண வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

வேலை நிறுத்தம் வாபஸ்

திருவண்ணாமலை மார்க்கெட் கமிட்டி செயலாளர் தர்மராஜ், அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் தண்டபாணி ஆகியோர் நேற்று மாலை வியாபாரிகள் மற்றும் கூலி தொழிலாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கூலி தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று ₹2.50 உயர்த்தி வழங்குவதாக கூறினர். இதனையேற்று கூலி தொழிலாளர்கள் கடந்த 4 நாட்களாக நடந்த வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக தெரிவித்தனர். இதையடுத்து கூலி தொழிலாளர்கள் இன்று முதல் பணிக்கு திரும்புவதாக கண்காணிப்பாளர் தினேஷ் தெரிவித்தார்.

Tags : Chetput , Chetput: Workers went on strike for the 4th day in Chetput Market Committee demanding a pay rise.
× RELATED ஆரணி, கீழ்பென்னாத்தூர், சேத்துப்பட்டு...