×

73வது குடியரசு தினவிழாவையொட்டி அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் கொடியேற்றினர்

சென்னை: 73வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு  சென்னையில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் உயர் அதிகாரிகள் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர். சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி தேசிய கொடியை ஏற்றி வைத்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் மரியாதையை ஏற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் நீதிபதிகள், உயர் நீதிமன்ற அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய வளாகத்தில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். காவல் துறையினரின் அணி வகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டனர்.

இதில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளர் சுந்தரவல்லி, முதன்மை தேர்தல் அலுவலர் சுப்பிரமணியம், முதன்மை தேர்தல் அலுவலர் தனலட்சுமி, நிதி ஆலோசகர் மற்றும் தலைமை கணக்கு அலுவலர் ஜெய்குமார், சட்ட ஆலோசகர் வெங்கடேசன், உதவி ஆணையர் அகஸ்ரீ சம்பத்குமார், தலைமை நிர்வாக அலுவலர் மைதிலி, மக்கள் தொடர்பு அலுவலர் ராம.பிரசன்ன வெங்கடேசன் மற்றும் ஆணையத்தின் கண்காணிப்பாளர்கள், அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் விஜயா ராணி தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர். சிறப்பாக பணிபுரிந்து ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை டீன் தேரணிராஜன், ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் ஜெயந்தி மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

சென்னை, மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சென்னை மாநகராட்சியில் அனைவருக்கும் முன்மாதிரியாக சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை பாராட்டி சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார். அப்போது துணை ஆணையர்கள் எம்.எஸ்.பிரசாத், விஷூ மஹாஜன், எஸ்.மனிஷ், சினேகா, சிம்ரன்ஜீத் சிங்காஹ்லோன், சிவகுரு பிரபாகரன், ஷேக் அப்துல் ரஹ்மான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கோயம்பேட்டில் உள்ள சென்னை, மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலகத்தில் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பிரதீப் யாதவ், தேசிய கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார். இதில் சென்னை, மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர்கள் ராஜேஷ் சதுர்வேதி, அர்ச்சுனன், உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். அதேபோல் சென்னை, ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் தேரணிராஜன், ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டீன் ஜெயந்தி, அரசு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் டீன் சாந்தி மலர், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இயக்குநர் மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர் மணி ஆகியோர் தேசிய கொடியேற்றி மரியாதை செய்தனர். இதில் டாக்டர்கள், செவிலியர்கள், பேராசிரியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

அரும்பாக்கம் அண்ணா அரசு சித்த மருத்துவமனையில் மருத்துவ நிலைய அதிகாரி டாக்டர் கோபி இமயவர்மன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.  சோழிங்கநல்லூர், செம்மொழி சாலையில் உள்ள தாம்பரம் கமிஷனர் அலுவலகத்தில் தாம்பரம் கமிஷனர் மு.ரவி கொடியேற்றி மரியாதை செலுத்தினார். கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் தலைவர் நீதிபதி பாஸ்கரன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

சென்னை, மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் தலைமையகமான பல்லவன் இல்லத்தில் மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அன்பு ஆபிரகாம் தேசிய கொடி ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார். நந்தனத்தில் உள்ள வீட்டு வசதி வாரிய தலைமை அலுவலகத்தில் தலைவர் பூச்சி முருகன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். புழல் மத்திய சிறையின் 3 பிரிவுகளிலும் சிறைத்துறை அதிகாரிகள் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினர். பின்னர் சிறைக் கைதிகள் மற்றும் சிறை காவலர்கள், ஊழியர்களுக்கு இனிப்புகள் வழங்கினர். மணலி சிபிசிஎல் நிர்வாகம் சார்பில், தண்டையார்பேட்டை ஐஓசி அருகேயுள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை குடியிருப்பு வளாகத்தில் சிபிசிஎல் நிர்வாக இயக்குனர் அரவிந்த்குமார் தேசிய கொடியேற்றினார்.


Tags : 73rd Republic Day , Officials flagged off government offices on the occasion of the 73rd Republic Day
× RELATED 73வது குடியரசு தினம்: சென்னை மெரினாவில்...