×

73வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று தேசிய கொடியை ஏற்றுகிறார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறார்

சென்னை: மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகே  73வது குடியரசு தினத்தை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையுடன் இன்று காலை 8 மணிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றுகிறார். தமிழக ஆளுநராக பதவியேற்ற ஆர்.என்.ரவி முதல் முறையாக மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே நாட்டுப்பண் இசைக்க தேசிய கொடியை இன்று காலை 8 மணிக்கு ஏற்றுகிறார். அதற்கு முன்னதாக, இன்று காலை 7.55 மணிக்கு நிகழ்ச்சிக்கு வருகை தரும், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறார்.

பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தலைமை செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் பிரபாகர், டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட அதிகாரிகளை அறிமுகம் செய்து வைக்கிறார். அதைதொடர்ந்து முப்படை ராணுவ வீரர்கள் மற்றும் தமிழக காவல் துறையின் அணி வகுப்பு நிகழ்ச்சி நடைபெறும்.முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி, இன்று மெரினா கடற்கரையில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட வீரமங்கை வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் அழகு முத்துக்கோன், பூலித்தேவன், ஒண்டிவீரன், வீரன் சுந்தரலிங்கம், குயிலி ஆகியோர் சிலைகளுடன் அலங்கார ஊர்தி இடம்பெறுகிறது.

இதேபோல், விடுதலைக்காக பாடுபட்ட வ.உ.சி, பாரதியார், சுப்பிரமணிய சிவா, ராகவாச்சாரி அவருடன் விடுதலைப் போரில் ஈடுபட்டவர்களை காட்சிபடுத்தும் தத்ரூப சிலைகளுடன் சுதேசி கப்பலும் அலங்கார ஊர்தியில் இடம்பெறுகிறது. இதுபோக, தந்தை பெரியார், ராஜாஜி, காமராஜர், தீரன் சின்னமலை உள்ளிட்ட தலைவர்களின் தத்ரூப உருவங்கள் அடங்கிய தத்ரூப சிலைகள் கொண்ட ஊர்தியும் இடம்பெறுகிறது.கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு மொத்தமாக 3 அலங்கார ஊர்திகள் மட்டுமே அணிவகுத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1 மணி நேரம் நடைபெறும். ஆனால், கொரோனா பரவலால் இந்த ஆண்டு 30 நிமிடங்களில் விழாவை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அணிவகுப்பு நிகழ்ச்சிகள் முடிந்ததும் முதலமைச்சரின் வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கங்கள், கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம், காந்தியடிகள் காவலர் பதக்கங்கள், வேளாண்மை துறையின் சிறப்பு விருதுகள் வழங்கப்படுகிறது. குடியரசு தினவிழாவில் நீதிபதிகள், அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.

* தமிழகம் பிற மாநிலங்களுக்கு முன்னோடி
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக மக்களுக்கு  தெரிவித்துள்ள குடியரசு திருநாள் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: தமிழகத்திலிருந்து பற்பல வீரர்களும் தியாகிகளும் தேச விடுதலை இயக்கத்தில் பங்கேற்றுள்ளனர். இவர்களில் பலர், காலனி ஆதிக்கத்தை ஒழிப்பதற்காக நேதாஜியின் தலைமையில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடியுள்ளனர். இந்திய தேசிய ராணுவத்தில் பங்கேற்றவர்களும் அவர்களின் வழித்தோன்றல்களும் நம்முடைய மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ளனர். தம்முடைய வியர்வை-ரத்தம்-தியாகம் ஆகியவற்றால் நமக்குச் சுதந்திர அமுதத்தை அளித்த வீரர்களையும் தியாகிகளையும் அடையாளம் கண்டு கவுரவிக்கவேண்டும். நம்முடைய மாநிலமான தமிழ்நாடு, முன்னோக்குப் பாதையில் பயணிக்கிறது. கோவிட் மேலாண்மையில், நாம் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளோம். 2021ல் ஏற்பட்ட புயல் மற்றும் பெருமழையின் பாதிப்புகளைக் குறைப்பதிலும் தடுப்பதிலும் மாநில அரசு வெகு சிறப்பாகப் பணியாற்றியுள்ளது. பல்வேறு துறைகளின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில், பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகவும் எடுத்துக்காட்டாகவும் தமிழ்நாடு உள்ளது.

Tags : Tamil Nadu ,Governor ,RN Ravi ,73rd Republic Day ,Chief Minister ,MK Stalin , Governor of Tamil Nadu RN Ravi accepts the national flag today on the occasion of the 73rd Republic Day: Chief Minister welcomes MK Stalin with a bouquet
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...