×
Saravana Stores

வடபழனி முருகன் கோயிலில் 14 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம்: தடைமீறி கோயில் முன்பு குவிந்த பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பி உற்சாகம்; இன்று முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதால் சிறப்பு ஏற்பாடு

சென்னை: வடபழனி முருகன் கோயிலில் 14 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. கொரோனா விதிகளால் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தடையை மீறி கோயில் பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் அரோகரா, அரோகரா கோஷம் எழுப்பி உற்சாகமாக தரிசனம் செய்தனர். இந்த நிலையில் இன்று முதல் பக்தர்களை அனுமதிக்க கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள வடபழனி முருகன் கோயிலுக்கு, சென்னை  மட்டுமின்றி, பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். இக்கோயிலில் கடந்த 2007ம்ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.  

ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்பதால் கடந்த 2020ல் பாலாலயம் செய்யப்பட்டு கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 2 ஆண்டுகள் கழித்து தற்போது தான் திருப்பணிகள் முடிக்கப்பட்டன. இந்த நிலையில், 14 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெறும் நிலையில்,  கடந்த 20ம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. இந்த யாக சாலை பூஜைகளை பிள்ளையார்பட்டி சர்வசாதகம் பிச்சை குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடத்தினர்.

கோயிலுக்குள் 108 குண்டங்களுடன் பிரமாண்டமான யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. யாகசாலையில் வைத்து பூஜிப்பதற்காக கங்கை, யமுனை, துங்கபத்ரா, காவிரி, கிருஷ்ணா, கோதாவரி, தாமிரபரணி உள்ளிட்ட நதிகளில் இருந்தும், ராமேஸ்வரம் தீர்த்தக்கிணறு, அறுபடை முருகன் கோயில்கள் என 15 இடங்களில் இருந்தும் புண்ணிய தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று காலை 10.30 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக, கும்பாபிஷேகம் நடப்பதற்கு முன்பு கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் பூஜை நடத்தினர். அதைத்தொடர்ந்து யாக சாலையில் இருந்து புனித நீர் கலசங்களை ஊர்வலமாக எடுத்து கோவிலை சுற்றி வந்தனர்.

காலை 10 மணியளவில் ராஜகோபுரம் உள்பட அனைத்து கோபுர விமானங்களுக்கும் கலசங்கள் கொண்டு செல்லப்பட்டது. சரியாக 10.30 மணி அளவில் கோபுரங்களில் புனித நீர் தெளிக்கப்பட்டது. ஒரே நேரத்தில் அனைத்து விமானங்களுக்கும் அபிஷேகம் செய்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து கற்பூர ஆரத்தி காட்டப்பட்டது. அப்போது, வானத்தில் கருடன்கள் வட்டமிட கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, முதன்மை செயலாளர் சந்தர மோகன், ஆணையர் குமரகுருபரன், இணை ஆணையர் ரேணுகா தேவி உட்பட அதிகாாரிகள் கலந்து கொண்டனர்.

முழு ஊரடங்கு காரணமாக கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் அனைத்தும் தொலைக்காட்சி, யூ-டியூப் சேனல் போன்றவை மூலம் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. இருப்பினும், கோயில் சுற்றுப்புற பகுதிகளில் வசிக்கும் மக்கள் தடையை மீறி கோயிலுக்கு வருகை தந்தனர். இதையடுத்து காவல்துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பொதுமக்களை அங்கு அனுமதித்தனர். கோயிலின் வாசல் மூடப்பட்டிருந்த நிலையில், வெளியே நின்றபடி பக்தர்கள் கும்பாபிஷேக விழாவைக் கண்டுகளித்தனர். இதனால் சுற்றிலும் உள்ள வீடுகளின் மாடிகளிலும், தெருக்களிலும் நின்றபடி பக்தர்கள் கும்பாபிஷேகத்தை பார்த்து தரிசித்தனர். கும்பாபிஷேகம் நடக்கும் போது, பக்தர்கள் கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என முழக்கமிட்டு குடமுழுக்கு விழாவை தரிசனம் செய்தனர்.

இந்த நிலையில். நேற்று மாலை 6 மணிக்கு மகாபிஷேகம் வெகுவிமர்சையாக நடந்தது. தொடர்ந்து முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து முருகப்பெருமான் கோயிலின் உட்புற பிரகாரத்தில் வலம் வந்து காட்சியளித்தார். இதை தொடர்ந்து இன்று முதல்  27ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். கும்பாபிஷேகத்துக்கு அனுமதிக்கப்படாத நிலையில் இன்று பக்தர்கள் ஏராளமானோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, கோயிலுக்கு வரும் பக்ரத்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி சுவாமி தரிசனம் செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags : Kumbabhishekam ,Vadapalani Murugan Temple , Kumbabhishekam after 14 years at Vadapalani Murugan Temple: Devotees gather in front of the temple to chant the Arogara slogan; Special arrangement as devotees are allowed from today
× RELATED பழநி கோயில் ராஜகோபுரத்திற்கு இன்று இலகு கும்பாபிஷேகம்