துக்க வீட்டில் ஒன்றாக மது அருந்தியபோது தகராறு தம்பியை கோடாரியால் வெட்டி கொலை செய்த அண்ணன் கைது: கும்மிடிப்பூண்டி அருகே பரபரப்பு

கும்மிடிப்பூண்டி: துக்க வீட்டில் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் தம்பியை கோடாரியால் சரமாரியாக வெட்டி கொலை செய்த அண்ணனை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கும்மிடிப்பூண்டி அடுத்த கெட்டணமல்லி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி(46). இவரது தம்பி சுரேஷ்(37). இருவரும் கட்டிட தொழிலாளிகள். தாய் தனலட்சுமியுடன் வசித்து வந்தனர். சுப்பிரமணிக்கு திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்கிறார். சுரேஷூக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர்கள் இருவரும் ஒன்றாக மது அருந்துவது வழக்கம்.இந்நிலையில், கெட்டணமல்லி கிராமத்தில் நேற்று முன்தினம் ஒருவர் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். இந்த துக்க நிகழ்ச்சியில் சுப்பிரமணி, சுரேஷூடன் சென்றார். பின்னர் இரவு வீட்டில் ஒன்றாக அமர்ந்து இருவரும் மது அருந்தினர். அப்போது, குடிபோதையில் இருவருக்கும் இடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் சரமாரி தாக்கிக்கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த சுப்பிரமணி வீட்டில் மரம் வெட்ட பயன்படுத்தும் கோடாரியால் சுரேஷை சரமாரியாக வெட்டினார்.

இதில் சுரேஷ், ரத்தவெள்ளத்தில் அலறியபடி மயங்கி விழுந்தார். இதை பார்த்ததும் சுப்பிரமணி அங்கிருந்து தப்பி ஓடினார். சுரேஷின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து படுகாயம் அடைந்தவரை மீட்டு கோட்டக்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி சுரேஷ் பரிதாபமாக பலியானார். தகவலறிந்த  கவரப்பேட்டை போலீசார் கெட்டணமல்லி கிராமத்துக்கு விரைந்து வந்து சுரேஷின் ரத்தம் கொட்டிய இடத்தையும், கொலைக்கான காரணங்கள் வேறு ஏதேனும் உள்ளதா என அப்பகுதி மக்களிடம் தீவிரமாக விசாரித்தனர். மேலும், சுரேஷின் சடலத்தை கைப்பற்றி அதே மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியை கைது செய்து விசாரிக்கின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: