×

சிப்காட்டிற்கு இடம் ஒதுக்கியதை கண்டித்து நாடாளுமன்ற தேர்தல் புறக்கணிப்பு: சுவரொட்டியால் பரபரப்பு

கும்மிடிப்பூண்டி: சிப்காட்டிற்கு இடம் ஒதுக்கியதை கண்டித்து புதுவாயில் காலனி மக்கள் நாடளுமன்ற தேர்தலை புறக்கணிப்பு என சுவரொட்டி பல பொதுஇடங்களில் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. கும்மிடிப்பூண்டி அடுத்த புதுவாயல் காலனி பகுதியில் 500 க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்த விவசாயிகள் சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி சுமார் 70 ஏக்கர் பரப்பளவில் 1992ம் ஆண்டு வரை நெல், வேர்க்கடலை, சம்பா, பச்சை பயிறு உள்ளிட்ட பல்வேறு விதமான பயிர்களை விவசாயம் செய்து நடத்தி வந்தனர்.

இந்நிலையில், சர்க்கரை ஆலை அமைக்க தமிழக அரசு 30 வருடங்களுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த 72 பேருக்கு சொந்தமான 78.34 ஏக்கர் நிலத்தை வீட்டிற்கு ஒருவருக்கு வேலை வாய்ப்பு என 1 சென்ட்க்கு ரூ.1,400 என சர்க்கரை ஆலைக்கு அரசு வாங்கியது. மேலும் ஆலை துவங்க பங்கு தொகை செலுத்தியும் அனைவரும் பங்குதாரர்களாக மாறி உள்ளனர். தொடர்ந்து 31 ஆண்டுகளாக சர்க்கரை ஆலை துவக்கப்படாத நிலையில், சர்க்கரை ஆலைக்காக தந்த நிலத்தை தங்களுக்கே திருப்பி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் பலமுறை அரசுக்கு கோரிக்கை வைத்தனர். ஆனால், சர்க்கரை ஆலைக்கு புதுவாயல் பகுதி மக்கள் தந்த நிலத்தை சிப்காட்டிற்கு தமிழக அரசு 3 மாதங்களுக்கு முன்பு ஒப்படைத்தது. இதுகுறித்து ஆதிதிராவிடர் சமுதாயத்தினர் பல கட்ட ஆர்ப்பாட்டம் நடத்தியும் அதன் பின்பு போலீசார் அவர்களை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது, அந்த இடத்தில் ரயில் சக்கரம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை தொடங்க கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இது சம்பந்தமாக மாவட்ட கலெக்டர் என பல்வேறு அதிகாரிகளுக்கு மேற்கண்ட ஆதிதிராவிடர் சமுதாயத்தில் புகார் அளித்தனர். இதுவரை அதன் மீது எந்த நடவடிக்கை கொடுக்காத காரணத்தினால் வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தல் புறக்கணிப்பு என மேற்கண்ட தகவல்களை கொண்டு மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே மற்றும் புதுவாயில், பெருவாயில் பகுதி, கவரப்பேட்டை மற்றும் ஆரம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

The post சிப்காட்டிற்கு இடம் ஒதுக்கியதை கண்டித்து நாடாளுமன்ற தேர்தல் புறக்கணிப்பு: சுவரொட்டியால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Chipgat ,Gummidipoondi ,Puduvayal Colony ,Kummidipoondi.… ,
× RELATED 100 சதவீதம் வாக்களிப்போம் என தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் உறுதிமொழி ஏற்பு