எம்.ஜி.ஆருக்காக முதலைக்கண்ணீர் விட்டு ஜெயக்குமார் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டிருக்கிறார்: ஆர்.எஸ்.பாரதி கண்டனம்

சென்னை: பொய் மூட்டைகளை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவிழ்த்து விட்டிருப்பதாக ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்ட கண்டன அறிக்கை:முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 105வது பிறந்த நாள் விழா தொடர்பாக முதலமைச்சரும், கழக தலைவருமான மு.க.ஸ்டாலின் பெருந்தன்மையோடும் - வரலாற்றுச் சான்றுகளோடும் எம்.ஜி.ஆருக்கும், கலைஞருக்கும் இருந்த கலையுலக நட்பு குறித்து வெளியிட்ட அறிக்கையை அனைவரும் குறிப்பாக, அ.தி.மு.க.வில் உள்ள அடிமட்ட தொண்டர்களும் பாராட்டியதை தாங்கிக் கொள்ள முடியாமல் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பொய்யினை புனைந்து அறிக்கையாக வெளியிட்டிருக்கிறார்.

மேலும், கலைஞரைப் பற்றியும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பற்றி விமர்சித்திருக்கிறார் ஜெயக்குமார். தலைவர் மு.க.ஸ்டாலினுடைய வரலாற்றையும் - எம்.ஜி.ஆருக்கும் மு.க.ஸ்டாலினுக்கும் இருந்த உறவு எத்தகையது என்பது ஜெயக்குமார் அறிந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், எம்.ஜி.ஆர். தி.மு.கவில் இருந்தபோதோ அல்லது எம்.ஜி.ஆர். புதிய கட்சி தொடங்கியபோதோ, ஜெயக்குமார் எங்கே இருந்தார் என்பது அ.தி.மு.க.வின் தொடக்கக் கால தொண்டர்களுக்கு தெரியும்.திமுக தலைவர் கோபாலபுரத்தில் தனது இளமைப் பருவத்தில், ‘இளைஞர் தி.மு.க.’ தொடங்கிய காலந்தொட்டு, அறிஞர் அண்ணா - எம்.ஜி.ஆர் போன்றவர்களின் பாராட்டைப் பெற்றவர்.

தமிழ்நாட்டு மக்கள் நலன் மட்டுமே கருத்தில் கொண்டு, அல்லும் பகலும் அயராது உழைத்து தமிழக மக்களின் மாபெரும் வாழ்த்துகளையும் - பாராட்டுகளையும் பெற்று வருவதைக் கண்டு பொறுத்துக் கொள்ள முடியாமல் வயிற்றெரிச்சல் காரணமாகவும் - காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவும் இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் ஜெயக்குமார். கலைஞர் முதலமைச்சராக பொறுப்பேற்ற உடன், எம்.ஜி.ஆர். நினைவிடத்தை சிறப்பாக அமைத்துக் கொடுத்தவர். எம்ஜிஆருக்காக முதலைக் கண்ணீர் விட்டு அறிக்கை விடும் யோக்கியதை ஜெயக்குமார் போன்றவர்களுக்கு அறவே கிடையாது.   ஜெயலலிதா மறைந்தபோது, சசிகலா காலில் சாஷ்டாங்கமாக விழுந்து கூவத்தூரில் கும்மாளம் அடித்து சசிகலாவை புகழ்ந்து பேசிவிட்டு, தற்போது அதே சசிகலாவை மிதிக்க நினைப்பவர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை பற்றி பேசவோ, அவரைப் பற்றி அறிக்கை விடவோ எந்த யோக்கியதையும் இல்லை. இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories: