×

காணும் பொங்கல் தினத்தை முன்னிட்டு மெரினா கடற்கரை, பொழுது போக்கு பூங்காக்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை

* கூடுதலாக போலீசார் கண்காணிப்பு

சென்னை :  தமிழகத்தில்  கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினம்  23,459 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் சென்னையில் மட்டும்  8,963 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கடந்த 6ம் தேதி முதல் பல்வேறு  கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அதைப்போன்று  பொங்கல் பண்டிகையையொட்டி 14ம் தேதி முதல் வரும் 18ம் தேதி வரை  கோயில்களுக்கும், கடற்கரை, நீர்நிலைகள் உள்ளிட்ட பொழுது போக்கு இடங்களுக்கு செல்லவும் பொதுமக்களுக்கு  கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் நேற்று முன்தினம் பொங்கல்  பண்டிகை, நேற்று மாட்டுப்பொங்கல் கொண்டாடிய நிலையில் இன்று காணும் பொங்கல் என மூன்று நாட்கள்  குடும்பத்துடன் கொண்டாடுவது வழக்கமாகும்.

மூன்றாவது நாளான இன்று காணும் பொங்கல்  தினத்தன்று கடற்கரை, பொழுது போக்கு பூங்கா போன்ற பகுதிகளில்  குடும்பத்துடன்  ஒன்று கூடி மகிழ்ச்சியாக கொண்டாடுவது வழக்கமாகும். இந்நிலையில்  கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து காணும் பொங்கல்  கொண்டாட்டத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி மெரினா கடற்கரை  பகுதிக்கு பொதுமக்கள் யாருக்கும் அனுமதி இல்லை.

முழு  ஊரடங்கும் அமலில் இருப்பதால் பொதுமக்கள் எக்காரணத்தைக் கொண்டும் வெளியில்  வர வேண்டாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் மெரினா கடற்கரையில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மெரினா கடற்கரையில் சாதாரண நாட்களில் செல்வதற்கும் கடந்த 6ம் தேதியில்  இருந்தே தடை இருந்து வருகிறது. இதையடுத்து அங்கு போலீசார் தொடர்ந்து  கண்காணித்து வருகின்றனர். இருப்பினும் இன்று கண்காணிப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது.

மெரினாவை போன்று பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரை உள்ளிட்ட  அனைத்து கடற்கரை பகுதிகளுக்கும், பொதுமக்கள் அதிகம் கூடும் பொழுது போக்கு  பூங்காக்கள் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு மக்கள் செல்லவும் தடை  விதிக்கப்பட்ட நிலையில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். எனவே பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே  வெளியில் வரவேண்டும். தேவை இல்லாமல் சுற்றினால் கடும் நடவடிக்கை  எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Marina Beach ,Pongal Day , Chnenai Beach, Kaanum Pongal,Parks Closed
× RELATED மெரினாவை சுற்றிப் பார்க்க அழைத்து...