×

எஸ்எப்ஐ மாணவர் குத்தி கொலை கேரளாவில் காங்.- சிபிஎம் பயங்கர மோதல்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் இடுக்கி பொறியியல் கல்லூரியில் எஸ்எப்ஐ அமைப்பின் மாணவர் குத்தி கொல்லப்பட்டதை தொடர்ந்து, கேரளா முழுவதும் காங்கிரஸ், சிபிஎம் தொண்டர்கள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டு உள்ளது.  கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகே பைனாவு என்ற இடத்தில் அரசு பொறியியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் நேற்று மாணவர் பேரவை தேர்தல் நடந்தது. சிபிஎம் மாணவர் அமைப்பான எஸ்.எப்.ஐ. மற்றும் காங்கிரஸ் மாணவர் அமைப்பான கே.எஸ்.யு. ஆகியவற்றுக்கு இடையே தான் நேரடிப் போட்டி நிலவியது. தேர்தல் நடந்து கொண்டிருந்த போது எஸ்.எப்.ஐ. மற்றும் கே.எஸ்.யு மாணவர்களுக்கிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இரு பிரிவினரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டனர். இதில் எஸ்.எப்.ஐ அமைப்பைச் சேர்ந்த தீரஜ், அபிஜித் மற்றும் அமல் ஆகிய 3 மாணவர்களுக்கும் சரமாரி கத்திக்குத்து விழுந்தது. உடனே அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி தீரஜ் பரிதாபமாக இறந்தார்.

இந்த தகவல் அறிந்ததும் செறுதோணி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இந்தக் கொலைக்கு காங்கிரஸ் மாணவர் அமைப்பான கே.எஸ்.யு., இளைஞர் காங்கிரஸ் தான் காரணம் என்று சிபிஎம் குற்றம் சாட்டி உள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து இடுக்கி அரசு பொறியியல் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த கொலை தொடர்பாக போலீசார் இளைஞர் காங்கிரசை சேர்ந்த நிகில் பைலியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து கேரளாவில் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் மற்றும் சிபிஎம் தொண்டர்கள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது. மலப்புரத்தில் கொலையை கண்டித்து டிஒய்எப்ஐ சார்பில் கண்டன ஊர்வலம் நடந்தது. அங்கு காங்கிரஸ் மாநாடு நடைபெற்ற இடத்தை நோக்கி பேரணி சென்றது. அப்போது காங்கிரஸ் மற்றும் சிபிஎம் தொண்டர்கள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. தலைமை செயலகம் முன்பு எஸ்எப்ஐ மாணவர் அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதேபோல் ஆலப்புழா, எர்ணாகுளம் உள்பட பல்வேறு பகுதியில் காங்கிரஸ், சிபிஎம் மாணவர்கள் அமைப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. மேலும், கோழிக்கோட்டில் காங்கிரஸ் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது. கொல்லத்தில் காங்கிரஸ் கூட்டணியை சேர்ந்த பிரேமசந்திரன் எம்பியின் கார் அடித்து நொறுக்கப்பட்டது. திருவனந்தபுரத்தில் உள்ள கேரள பல்கலை கழக கல்லூரியில் காங்கிரஸ் மற்றும் சிபிஎம் மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் கேரளா முழுவதும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Tags : SFI ,Kerala. ,CPM , SFI student, stabbing, stabbing
× RELATED ஓடும் பஸ்சிலிருந்து கீழே விழ இருந்த வாலிபரை காப்பாற்றிய கண்டக்டர்