×

முதுகலை மருத்துவ படிப்பு கலந்தாய்வுக்கு அனுமதி.! ஓபிசி.க்கு 27% இடஒதுக்கீடு செல்லும்; உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புதுடெல்லி: ‘முதுகலை மருத்துவ படிப்பிற்கான அகில இந்திய இடஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியது செல்லும்’ என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு  இடஒதுக்கீடு வழங்குவது குறித்து குழு அமைத்து முடிவெடுக்க, 2020ம் ஆண்டு ஒன்றிய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இதை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி தி.மு.க தரப்பில் உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இைத  விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, ‘அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நாடு முழுதும் ஒரே மாதிரியான இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திற்கும், ஒவ்வொரு மாதிரியான இடஒதுக்கீட்டை பின்பற்ற முடியாது. மருத்துவப் படிப்புகளில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு அனுமதிக்கக் கூடியதுதான்.

பொருளாதாரத்தில்் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு,  மொத்த இடஒதுக்கீட்டு அளவான 50 சதவீதத்திற்கு அதிகமாக உள்ளது. அதனால், உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் அந்த இடஒதுக்கீட்டை அனுமதிக்க முடியாது,’ என தீர்ப்பளித்தது. இந்த உத்தரவுக்கு எதிராக ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இதற்கிடையே, பெருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு மருத்துவப் மேற்படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில் கூடுதலாக 10 சதவீதம் வழங்கியதை அமல்படுத்துவது தொடர்பாக தேசிய தேர்வுகள் முகமை கடந்த ஜூலை 30ம் தேதி அறிவிப்பு  வெளியிட்டது. அந்த உத்தரவை எதிர்த்து மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான் உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்தார். இதில், திமுகவும், தமிழக அரசும் தங்களை மனுதாரராக இணைத்துக் கொண்டன. நேற்று முன்தினமும் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. அனைத்து வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்ச நீதிமன்றம் தீர்ப்பை நேற்று வழங்குவதாக அறிவித்தது.

அதன்படி, நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், போபண்ணா அமர்வு நேற்று தீர்ப்பை வழங்கியது. அதில், ‘முதுகலை நீட் தேர்வுக்கான கலந்தாய்வை தொடங்க அனுமதி வழங்கப்படுகிறது. இதில், அகில இந்திய இடஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கிய அறிவிப்பாணை முழுமையாக செல்லக் கூடியதாகும். இதில் உயர் நீதிமன்றம் வழங்கிய முந்தைய உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. அதனால், இந்த உத்தரவை அடிப்படையாக கொண்டு சட்ட விதிகள் அனைத்தையும் கடை பிடித்து இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வை நடத்த அனுமதிக்கப்படுகிறது. மேலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத கூடுதல் இடஒதுக்கீட்டை, நடப்பு கல்வியாண்டில் (2021-22) மட்டும் பயன்படுத்தி மருத்துவக் கலந்தாய்வு நடத்த அனுமதிக்கப்படுகிறது. இறுதி விசாரணை மார்ச் 3வது வாரத்தில் நடைபெறும்,’ என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து, மருத்துவ கலந்தாய்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேசிய தேர்வு முகமை விரைவில் வெளியிடும் என தெரிய வருகிறது.

Tags : OBC ,Supreme Court , 27% reservation goes to OBC for admission to postgraduate medical study consultation; Supreme Court Judgment of Action
× RELATED பாஜக ஓபிசி அணி மாநில செயலாளர்...