மாமல்லபுரம்: ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகேயுள்ள கீழ் புதுப்பேட்டை கிராமத்தில் பூலோக வைகுண்டமாக திகழும் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் உள்ளது. 88வது திருச்சன்னதியாக விளங்கும் வகையில் இங்குள்ள 6 ஏக்கர் நிலப்பரப்பில் சைவம், வைணவம், ஸ்ரீ சாக்தம், சௌரம், கௌமாரம் மற்றும் காணபத்யம் உள்ளிட்ட 6 மதங்களுக்குரிய தெய்வங்களுடன் சிவலிங்க ரூபமாக 468 சித்தர்கள், ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாள் மற்றும் அஷ்டநாக கல் கருட பகவான் சிலை வடிவமைக்க மாமல்லபுரம் அம்பாள் நகரில் உள்ள பிரகாஷ் சிற்ப கலைகூடத்தில் ஆர்டர் கொடுக்கப்பட்டது.
அதன்படி 15 டன் எடையுள்ள ஒரே கல்லில் 16.8 அடி உயரம், 7 அடி அகலத்தில் நின்ற கோலத்தில் சைவ ஆகம முறைப்படி அஷ்ட நாக கல் கருட பகவான் சிலையை மாமல்லபுரத்தை சேர்ந்த லோகநாதன் ஸ்தபதி மற்றும் 10க்கும் மேற்பட்ட சிற்பிகள் கடந்த 12 மாதமாக செதுக்கி வடிவமைத்தனர். தற்போது அஷ்ட நாக கல் கருட பகவான் சிலை செதுக்கும் பணி முழுமையாக முடிவடைந்துள்ளது. இதையடுத்து, சைவ ஆகம முறைப்படி மூன்று கால பூஜை செய்தனர். லோகநாதன் ஸ்தபதி, சிற்பிகள், தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்கள் கற்பூரம் ஏற்றியும், தேங்காய் உடைத்தும் வழிபாடு நடத்தினர்.
பின்னர், லாரியில் ஏற்பட்ட அஷ்ட நாக கல் கருட பகவான் சிலை இன்று காலை புதுப்பேட்டை கிராமத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூரம் ஏற்றியும், தேங்காய் உடைத்தும் வழிபட்டனர். இந்த சிலை வரும் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் கும்பாபிஷேகம் செய்து, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நிறுவப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.