×

அதிகரிக்கும் கொரோனா: பணியாளர்கள் 50% பேர் வீட்டில் இருந்து பணிபுரிய ஒன்றிய அரசு அனுமதி; பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறையும் நிறுத்தம்!

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், ஒன்றிய அரசு பணியாளர்கள் 50% பேர் வீட்டில் இருந்து பணிபுரிய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் ஒன்றிய அரசின் பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறையும் நிறுத்தப்பட்டுள்ளது. சில நாட்களாகவே இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. ஓமிக்ரான் எனும் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையும் 1700 ஆக இந்தியாவில் அதிகரித்துள்ளது. கொரோனா,ஓமிக்ரான் என 2 கிருமி பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் ஒன்றிய  அரசு அலுவலகங்களில் சார்புநிலைச் செயலாளர்களுக்கு கீழ் பணிபுரியும் அதிகாரிகள், பணியாளர்களில் 50% பேர் அலுவலகத்திலும் எஞ்சிய 50% பேர் வீடுகளில் இருந்தும் பணிபுரியலாம் என ஒன்றிய அரசு அனுமதித்துள்ளது. மேலும் கர்ப்பிணிகள், மாற்றுத் திறனாளி பணியாளர்கள் அலுவலகங்களுக்கு வருவதில் இருந்தும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கொரோனா கட்டுப்பாட்டு மண்டல பகுதிகளில் வசிக்கின்ற அதிகாரிகள், பணியாளர்களும் அலுவலகங்களுக்கு வருவதில் இருந்து ஒன்றிய அரசு விலக்கு அளித்திருக்கிறது.

இதனிடையே கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊழியர்களுக்கான பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறை நிறுத்தப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கான பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை உடனடியாக நிறுத்தப்படுகிறது. ஒன்றிய  அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : Corona ,U.S. government , ஒன்றிய அரசு பணியாளர்கள்
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...