×

துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த புதுக்கோட்டை சிறுவன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை; துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த புதுக்கோட்டை சிறுவன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். புதுக்கோட்டை, அம்மாசத்திரத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் சிறுவனின் உறவினர்கள் 2மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே பசுமலைப்பட்டி கிராமத்தில் போலீசார் துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் உள்ளது. மலைகள், பாறைகள் நிறைந்த பகுதியில் போலீசார் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த 30ம் தேதி  மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு குண்டு சுமார் 2கி.மீ. தூரம் தொலைவிற்கு பாய்ந்து சென்றது. அந்த குண்டு நார்த்தாமலையில் உள்ள ஒரு குடிசை வீட்டின் வாசலில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்த சிறுவன் புகழேந்தியின்(11) தலையின் இடதுபுறத்தில் பாய்ந்து சிறுவன் மயக்கமடைந்து விழுந்தான். அவனை தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவக்குழுவினர் 31-ம் தேதி 4 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின் சிறுவனின் தலையில் இருந்த குண்டை அகற்றினர்.

CISF வீரர்கள் துப்பாக்கிசுடும் பயிற்சியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் விசாரணை நடைபெற்றது. 5 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த சிறுவன் புகழேந்தி(11) சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்நிலையில் சிறுவன் உயிரிழந்ததால் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திருச்சி - புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். உயிரிழந்த சிறுவனுக்கு ஞாயம் கிடைக்க வேண்டும். நீதிவிசாரணை நடத்த வேண்டும். சிறுவன் குடும்பம் மிகவும் பின்தங்கிய ஏழ்மையான குடும்பம் என்பதால் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இதுபோன்ற சம்பவம் தொடராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அரசிடம் பேசி உரிய நிவாரணம் பெற்று தரப்படும் என உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் விளக்கிக்கொள்ளப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக சிறுவனின் உடலை வாங்க மறுத்து தஞ்சை மருத்துவமனையிலும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டக்காரர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த புதுக்கோட்டை சிறுவன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


Tags : Pudukottai ,Chief Minister ,MK Stalin , Rs 10 lakh compensation for Pudukottai boy's family: Chief Minister MK Stalin's announcement
× RELATED குடியிருப்பு பகுதிகளில் கடைசி...