நிலம் கையகப்படுத்துதல், மறு குடியேற்றம், மறுவாழ்வு பிரிவுக்காக சென்னை-கன்னியாகுமரி தொழிற்தட திட்டம் மேலும் 3 ஆண்டுகளுக்கு கால நீட்டிப்பு: அரசு உத்தரவு

சென்னை: சென்னை-கன்னியாகுமரி தொழிற்தட திட்டத்துக்கு மேலும் 3 ஆண்டுகள் கால நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவியுடன் சென்னை-கன்னியாகுமரி தொழில் தட திட்டத்தின் கீழ் 13 கடலோர மாவட்டங்கள் மற்றும் 11 உட்புற மாவட்டங்களில் 4,318 கி.மீ நீள தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் 3,729 கி.மீ மாநில நெடுஞ்சாலைகள் என மொத்தம் 8,047 கி.மீ சாலைகள் கண்டறியப்பட்டுள்ளது. இச்சாலைகளை 6 கட்டங்களாக மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 15 மாநில நெடுஞ்சாலைகள், 12 தேசிய நெடுஞ்சாலைகள் எடுத்து கொள்ளப்படுகிறது. இத்திட்டம் ரூ.6448 கோடியில் நடக்கிறது.

இந்த திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக செய்யூர்-போளூர் சாலை, காஞ்சிபுரம்-அரக்கோணம்-திருத்தணி சாலை, செங்கல்பட்டு முதல் காஞ்சிபுரம் சாலை, திருச்செந்தூர் முதல் அம்பாசமுத்திரம் சாலை, மேலூர்-திருப்பத்தூர் சாலை உட்பட 16 சாலைகளை இருவழி மற்றும் நான்கு வழித்தடங்களாக மாற்றப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் 16 சாலை மேம்பாட்டு பணிகளுக்கு கடந்த 2020ம் ஆண்டு விரிவான அறிக்கை தயார் செய்து அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பேரில், இந்த திட்டத்துக்கு கடந்த ஜூன் மாதம் ஆசிய வளர்ச்சி வங்கியுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. தொடர்ந்து இந்த சாலை பணிகளுக்கு ஒப்புந்தபுள்ளி கோரப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

இது குறித்து நெடுஞ்சாலைத்துறை முதன்மை செயலாளர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:

சென்னை கன்னியாகுமரி தொழிற்தடத்தின் கீழ் நிலம் கையகப்படுத்ததல் மற்றும் மறுகுடியேற்றம், மறு வாழ்வு பிரிவில் 293 பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. மாவட்ட சிறப்பு வருவாய் அலுவலர் 5 பேரும், துணை கலெக்டர் 5 பேரும், தாசில்தார் 16 பேரும், துணை தாசில்தார் 17 பேரும், உதவியாளர் 34 பேர், வருவாய் ஆய்வாளர் 32 பேர், நில அளவை உதவி ஆய்வாளர் என மொத்தம் 293 பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. மேலும், 48 பணியிடங்கள் உருவாக்கப்படுகிறது. காஞ்சிபுரம், சேலம், கும்பகோணம், திருநெல்வேலி ஆகிய 4 சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் பிரிவில் 4 துணை தாசில்தார், 4 உதவி கணக்கு அலுவலர், உட்பட 48 பணியிடங்கள் உருவாக்கப்படுகிறது. இந்த பிரிவுகள் மூலம் நிலம் கையகப்படுத்த வேண்டியிருப்பதால் மேலும் 3 ஆண்டுகாலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Related Stories: