×

கொசஸ்தலை ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு தரைப்பாலம் 2 முறையாக துண்டிப்பு: 10 கிராம மக்கள் தவிப்பு

ஊத்துக்கோட்டை: கனமழை காரணமாக மீண்டும்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மெய்யூர் கொஸ்சதலை ஆற்றின் தரைப்பாலம் 2வது முறையாக துண்டிக்கப்பட்டது. இதனால், 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். ஊத்துக்கோட்டை மற்றும் பூண்டி அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த மழையால் பூண்டி ஏரி நிரம்பியது. இதனால், அணையின் பாதுகாப்பு கருதி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால், கொசஸ்தலை ஆற்றின் வழித்தடமான மெய்யூர் பகுதியில் கடந்த நவம்பர் மாதம் 4ம் தேதி கரைப்புரண்டு ஓடிய மழை நீரால் தரைப்பாலம் துண்டிக்கப்பட்டது.

இதனால், மெய்யூர் ஆவாஜிபேட்டை, வெம்பேடு, செம்பேடு, வெங்கல், மாளந்தூர், எரையூர், மொன்னவேடு, சித்தம்பாக்கம் அரும்பாக்கம், மேலானுர், மூலக்கரை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திருவள்ளூர் - மெய்யூர் போக்குவரத்து இன்றி அவதிப்பட்டு வந்தனர். திருவள்ளூர் செல்ல வேண்டுமானால் சீத்தஞ்சேரி அல்லது வெங்கல் வழியாக செல்ல வேண்டும். அவ்வாறு, இவர்கள் செல்ல 15 முதல் 20 கிலோ மீட்டர் தூரம் சுற்றிகொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. 40 நாட்களுக்கு மேலாக போக்குவரத்து இன்றி மெய்யூர் மக்கள் அவதிப்பட்டனர்.

இந்நிலையில், 40 நாட்களுக்கு பிறகு கடந்த சில நாட்களாக சேதமடைந்த தரைப்பாலம் சீரமைக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 2 நாட்களாக மீண்டும் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால், பூண்டி ஏரி நிரம்பியது. மேலும், ஏரியின் பாதுகாப்பு கருதி நேற்று முன்தினம் வினாடிக்கு 700 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.  இதனால், சீரமைக்கப்பட்ட மெய்யூர் கிராம தரைப்பாலம் மீண்டும் உடைந்தது. இதனால், சுற்றியுள்ள 10 கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகி செய்வதறியாது தவிக்கின்றனர்.

Tags : Kosasthalai river , Flood ground bridge cut again 2 times in Kosasthalai river: 10 villagers suffer
× RELATED எண்ணூரில் கச்சா எண்ணெய் கழிவில்...