×

எண்ணூரில் கச்சா எண்ணெய் கழிவில் நனைந்தது சிகிச்சை முடிந்து பறவைகள் மீண்டும் பறக்க விடப்பட்டன

திருவொற்றியூர், மார்ச் 2: எண்ணூரில் கச்சா எண்ணெய் கழிவில் நனைந்த பறவைகள் சிகிச்சைக்குப் பின் மீண்டும் சதுப்புநில பகுதிகளில் பறக்க விடப்பட்டன. மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், கச்சா எண்ணெய் கழிவு கலந்து, எண்ணூர் முகத்துவாரப் பகுதிகளில் எண்ணெய் படலம் மிதந்தது. இதனால் ஏராளமான கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்பட்டது. மேலும் இந்த எண்ணெய் படலம் சுற்றியுள்ள அலையாத்திகாடு, சதுப்பு நிலங்களில் படர்ந்ததால் அப்பகுதியில் இருந்த ஏராளமான பறவைகள் உடலில் எண்ணெய் படர்ந்து நிறம் மாறி காட்சியளித்ததோடு, பறக்க முடியாமல் சிரமப்பட்டன. பல பறவைகள் கவலைக்கிடமானது.

இதனைத் தொடர்ந்து வனத்துறை மற்றும் பறவைகள் பாதுகாப்பு தனியார் தொண்டு நிறுவனம் இணைந்து, அப்பகுதியில் முகாமிட்டு படகுகள் மூலம் சென்று எண்ணெய் படலத்தால் பாதிக்கப்பட்ட பறவைகளை மீட்டு அதன்மேல் இருந்த எண்ணை படலத்தை அகற்றி விடுவித்தனர். ஆனாலும் 10 கூழைகடா பறவைகள் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்ததால், அவற்றை மீட்டு கிண்டியில் உள்ள சிறுவர் பூங்காவில் வைத்து பாதுகாத்து சிகிச்சை அளித்தனர். தற்போது சிகிச்சை முடிந்து பறவைகள் ஆரோக்கியமாக இருப்பதால் இந்த பறவைகளை மீண்டும் எண்ணூர் பகுதிகளில் பறக்க விடுவதற்கு வனத்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி நேற்று காலை சுற்றுச்சூழல் துறை செயலர் சுப்ரியாசாகு தலைமையில் வன உயிரின காப்பாளர் பிரசாந்த், மாவட்ட வன அலுவலர் சுப்பையா, கிண்டி சிறுவர் பூங்கா அலுவலர் கலைவேந்தன் மற்றும் வனத்துறை அதிகாரிகள் எண்ணூரில் முகாமிட்டனர். பின்னர் முகத்துவார ஆற்று மேம்பாலத்தில் இருந்து பறவைகளை பாதுகாப்பாக பறக்க விட்டனர்.

The post எண்ணூரில் கச்சா எண்ணெய் கழிவில் நனைந்தது சிகிச்சை முடிந்து பறவைகள் மீண்டும் பறக்க விடப்பட்டன appeared first on Dinakaran.

Tags : Ennore ,Thiruvottiyur ,Kosasthalai river ,Mikjam ,
× RELATED சென்னை திருவொற்றியூரில் விசாரணைக்கு...