×

புத்தாண்டை வரவேற்போம் கொரோனாவுக்கு விடைகொடுப்போம்: காணொலியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: முதலமைச்சராக மட்டுமல்ல, உங்கள் நலனுக்கும் பொறுப்பேற்று கொண்டேன். புத்தாண்டை வரவேற்போம், கொரோனாவுக்கு விடை கொடுப்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலியில் பொதுமக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலியில் நேற்று பேசியதாவது: உங்கள் எல்லோருக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள். கொரோனா என்ற நோய் தொற்றின் முதலாவது அலை மற்றும் 2வது அலையிலிருந்து நாம் மீண்டு வந்திருக்கிறோம். தடுப்பூசி முகாம்களை தொடர்ந்து நடத்தியபோது, அறிவியல் மீது நம்பிக்கை வைத்து ஆர்வத்துடன் வந்து ஊசி போட்டு கொண்டீர்கள்.

உங்களுடைய ஆர்வம் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அதனால் தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. கொரோனா பரவலையும், இறப்பு எண்ணிக்கையையும் பெருமளவில் கட்டுப்படுத்த முடிந்தது. அதே மாதிரியான ஒரு ஒத்துழைப்பைத்தான் இந்த புத்தாண்டில் உங்களிடம் மறுபடியும் நான் எதிர்பார்க்கிறேன். கொரோனா தொற்று பல உருமாற்றங்களை அடைந்திருக்கிறது. இப்போது ஒமிக்ரான் என்ற பெயரில் அது உலகம் முழுவதும் பரவி கொண்டிருக்கிறது. அதனுடைய வேகம் அதிகரித்து இருக்கிறது. அதனால் நாம் இன்னும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.

 ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த முழுமையான ஏற்பாடுகளை செய்திருக்கிறோம். அதனால் நீங்கள் யாரும் பயப்பட தேவை இல்லை. உங்கள் ஒத்துழைப்புதான் எங்களுக்கு தேவைப்படுகிறது. கோவிட் காலத்தில் கடைபிடிக்க வேண்டிய பழக்கங்களை கட்டாயமாக நீங்கள் கடைபிடிக்க வேண்டும். கூட்டம் கூடுகின்ற நிகழ்ச்சிகளை தயவு செய்து தவிர்த்து விடுங்கள். அவசர தேவைகள், அன்றாட பணிகளுக்காக வெளியில் போகும்போது போதுமான இடைவெளியை கடைபிடியுங்கள். சானிடைசர் பயன்படுத்துங்கள் அல்லது சோப்பு போட்டு நன்றாக கையை கழுவுங்கள். முகக்கவசத்தை கட்டாயம் பொதுவெளியில் போட்டு கொள்ளுங்கள்.

தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்கள் இருந்தீர்கள் என்றால், தாமதிக்காமல் போட்டு கொள்ளுங்கள். முதல் டோஸ் போட்டவர்கள், உங்களுக்கு சொல்லப்பட்ட தேதியில் 2வது டோஸ் போட்டு கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் அந்த வயதில் சிறார்கள் இருந்தால், மறக்காமல் தடுப்பூசி முகாமிற்கு அழைத்து சென்று ஊசி போட்டு கொண்டு வாருங்கள். தமிழ்நாட்டு மக்களான நீங்கள், நிச்சயமாக ஒத்துழைப்பு தருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். அரசு அறிவித்திருக்கிற வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று உங்களுடைய முதலமைச்சராக மட்டுமல்ல, உங்களுடைய அன்பு சகோதரனாகவும், உங்களில் ஒருவனாகவும், மிகுந்த பணிவோடு நான் கேட்டு கொள்கிறேன். மீண்டும் ஒருமுறை புத்தாண்டு வாழ்த்துகளை சொல்லி கொள்வதுடன், புத்தாண்டில் மகிழ்ச்சியாக இருப்பதை போலவே நீங்கள் எல்லோரும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும்.
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Tags : New Year ,Corona ,Md. ,KKA ,Stalin , New Year, Corona, Video, Chief MK Stalin
× RELATED குரோதத்தை விடுத்து அன்பை விதைத்திடும் குரோதி புத்தாண்டு!