சென்னை: திருக்குவளையில் உள்ள தியாகராஜர் கோயிலில் கடந்த 9.10.2016ல் மிகவும் பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான மரகதலிங்கம் திருடுபோனது. இதுகுறித்து தருமபுரம் ஆதீன மடத்தின் கண்காணிப்பாளர் சவுரிராஜன் திருக்குவளை காவல் நிலையத்தில் அப்போது புகார் அளித்தார். அதன்படி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே தஞ்சை அருளானந்த நகரில் சாமியப்பன் என்பவருடைய வீட்டில் தொன்மையான கோயில் சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது வீட்டில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று முன்தினம் சோதனையிட்டனர். அப்போது சாமியப்பன் வீட்டில் இல்லை. அவரது மகன் அருண பாஸ்கர் மட்டும் வீட்டில் இருந்தார். அவரிடம் நடத்திய விசாரணையில், தனது தந்தை வசம் தொன்மையான பச்சை மரகத லிங்கம் ஒன்று இருப்பதாகவும், அது தற்போது வங்கி லாக்கரில் இருப்பதாகவும் பரபரப்பு தகவல் தெரிவித்தார்.
உடனடியாக வங்கி லாக்கரில் உள்ள பச்சை மரகதலிங்கத்திற்கான ஆவணங்களை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கேட்டனர். ஆனால் அதுதொடர்பான எந்த ஆவணங்களும் தங்களிடம் இல்லை எனவும் அவர் தெரிவித்தார். உடனே வங்கி லாக்கரில் இருந்து மரகதலிங்கத்தை மீட்ட சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், அதன் மதிப்பு குறித்து அங்கீகாரம் பெற்ற மரகதக்கல் மதிப்பீட்டாளர்களிடம் காண்பித்து ஆய்வு செய்தனர். அப்போது, பறிமுதல் செய்யப்பட்ட பச்சை மரகதலிங்கத்தின் தற்போது சர்வதேச மதிப்பு ₹500 கோடி இருக்கும் என்று தெரிவித்தனர்.
விசாரணையில், மரகதலிங்கம் சோழ மன்னர்கள் கம்போடியாவுக்கு போருக்கு சென்று அங்கு வெற்றி பெற்று அங்கிருந்து கொண்டு வந்ததும், இது, திருக்குவளையில் உள்ள தருமபுரம் ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தியாகராஜர் கோயிலில் திருடுபோன பச்சை மரகதலிங்கம் என்பதும் தெரியவந்தது. சிலையை வங்கி லாக்கரில் வைத்திருந்த சாமியப்பன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட சிலை குறித்து விசாரணை நடத்த முடியாத நிலை உள்ளது.
எனவே சாமியப்பன் குணமடைந்த பிறகு தான், சிலை குறித்து முழுமையான தகவல் தெரியவரும் என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். சாமியப்பன் மருத்துவமனையில் இருந்தாலும், குணமடைந்த உடன் சிலை குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு மூலம் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம், தியாகராயர் கோயிலில் பாதுகாப்பாக வைத்திருந்த சிலை எப்படி சாமியப்பன் கைக்கு வந்தது. இதன் பின்னணியில் உள்ள நபர்கள் யார் யார், சர்வதேச கும்பலுக்கும் இந்த திருட்டுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டிஜிபி ரொக்கப்பரிசு
கடந்த 4 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த ₹500 கோடி மதிப்புள்ள பச்சை மரகதலிங்கத்தை மீட்க துரிதமாக செயல்பட்ட சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி வெகுவாக பாராட்டினார். இதுபோல, தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சிலையை மீட்ட சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரை நேரில் அழைத்து ₹50ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார்.