×

போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் இன்று 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை: மாநகர் போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு

சென்னை: போக்குவரத்து தொழிற்சங்கங்களுடனான 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை இன்று நடக்கிறது. இதில் 65 பேரவை மற்றும் தொழிற்சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர் என எம்டிசி தெரிவித்துள்ளது.  
தமிழகத்தில் சென்னை, விழுப்புரம், கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட இடங்களில் அரசு போக்குவரத்துக்கழகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு அலுவலக பணியாளர்கள், ஓட்டுநர்கள், நடத்துனர்கள் மற்றும் இதர ஊழியர்கள் என சுமார் 1.25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். 3 ஆண்டுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் கடந்த 2017ம் ஆண்டு 13வது ஊதிய ஒப்பந்தம் ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து 14வது ஊதிய ஒப்பந்தம் 2020ம் ஆண்டு நடைபெற்று இருக்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தது. இதனால் பேச்சுவார்த்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும் என தொழிற்சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி நடந்த பேச்சுவார்த்தையின் போது உடன்பாடு எட்டப்படவில்லை. மேலும் தேர்தல் காரணமாக பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பேச்சுவார்த்தையை விரைந்து தொடங்க வேண்டும் என தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தி வந்தனர். இதன்படி 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையானது இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கொரோனா காரணமாக எப்போதும் போல் இல்லாமல்  தொழிற்சங்கம், பேரவை சார்பில் ஒரு பிரதிநிதி மட்டும் கலந்து கொள்ள வேண்டும் என ஏற்கனவே தொழிற்சங்கங்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் அரசு கூறியுள்ளது.

இந்நிலையில் மாநகர போக்குவரத்து கழகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, தமிழ்நாடு அரசு அனைத்துப் போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கான ஊதியம், பல்வேறு படிகள் மற்றும் சலுகைகள் குறித்த, 14வது ஊதிய ஒப்பந்த மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை, போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தலைமையில், நாளை (இன்று) குரோம்பேட்டை, மாநகர் போக்குவரத்துக் கழகப் பயிற்சி மைய வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலாளர் கோபால்; நிதித்துறை இணைச் செயலாளர் அருண் சுந்தர் தயாளன்; ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை குழுவின் உறுப்பினர் செயலாளர்; கூட்டுனர் குழு, துணைக் குழு உறுப்பினர்கள் மற்றும் 65 பேரவை தொழிற்சங்கங்களைச் சார்ந்த பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.



Tags : Transport Unions ,Bailiff Transport Corporation , 14th Wage Contract Negotiations with Transport Unions Today: Bailiff Transport Corporation Announcement
× RELATED போக்குவரத்து தொழிற்சங்கத்தினர்...