×

தரமில்லாத கட்டிடங்களால் விபத்து; தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் முதல்வர் நடவடிக்கை எடுப்பார்: அமைச்சர் சேகர்பாபு

சென்னை: துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பிரகாசம் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை,  அரசு பல்மருத்துவ கல்லூரி மாணவர் விடுதி, மற்றும் நடைபாதை பூங்கா ஆகியவற்றை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேகர்பாபு  நேரில் ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது கடந்த மாதம் பெய்த பெரு மழையினால் ஏற்பட்ட பாதிப்புகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடர்ந்து 40 நாட்களாக நேரில் சென்று பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். அடுத்து வரும்  காலத்திற்குள், தற்பொழுது ஏற்பட்ட பாதிப்புகள் மீண்டும் ஏற்படாத வண்ணம் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள எங்களுக்கும் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில் துறைமுகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பிரகாசம் சாலை,  பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஆகிய பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்வாய்களை தற்போது பார்வையிட்டோம் , இங்குள்ள பூங்கா பொதுக்கழிப்பிடமாக மாறி,  புதர்மண்டி கிடக்கிறது. மேலும் கட்டிட இடிபாடுகளும் குப்பைகள் குவிந்து இருப்பது குறித்து பல் மருத்துவக் கல்லூரி முதல்வர் அவர்களும் மாணவ மாணவிகளும் அளித்த புகாரின் அடிப்படையில் அதனையும் பார்வையிட்டோம். இந்த குறைபாடுகள் மாநகராட்சியால் இரண்டு நாளில் நிச்சயம் சரி செய்யப்படும். இங்கு உள்ள அரசு பல் மருத்துவக்கல்லூரி நீண்ட நெடிய பாரம்பரியமிக்க கல்லூரியாகும்.  இங்குள்ள மாணவ மாணவிகள் தங்கும் உண்டு- உறைவிடத்தில் 380 மாணவிகளும், 105 மாணவர்களும் தங்கி பயின்று வருகின்றனர்.

இந்த விடுதி 1980 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. தற்பொழுது இந்த விடுதியை புனரமைப்பது குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோரின் ஒத்துழைப்புடன் இங்கு தங்கியுள்ள ஒவ்வொரு மாணவர்களுக்கும் தலா 100 சதுர அடியுடன் அனைத்து அடிப்படை வசதிகளும் கொண்ட   உண்டு உறைவிடமாக அமைத்திட தமிழக முதல்வர் அவர்களிடம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் வேண்டுகோள் வைக்க உள்ளேன். மேலும் அரசு ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையிலும் நோயாளிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் புனரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரசு ராஜிவ்காந்தி பொது மருத்துமனையில் ஒமைக்ரான் நோய்க்கு சிகிச்சை அளித்திட சிறப்பு வார்டினை திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்கள் தலைமையிலான கழக அரசு அமைந்தவுடன் தமிழக முதல்வர் அவர்கள் எடுத்த அதிரடி நடவடிக்கையின் காரணமாக கொரோனா நோய் தொற்று 37 ஆயிரத்திலிருந்து, எவ்வாறு முற்றிலும்  கட்டுப்படுத்தப்பட்டதோ, அதேபோல் ஒமைக்ரான் நோய்த்தொற்றும் நிச்சயம் தமிழகத்தில் ஊடுருவாமல் தடுக்க தமிழக முதல்வர் அவர்கள் போதிய நடவடிக்கையை நிச்சயம் எடுப்பார். புளியந்தோப்பு கே.பி பார்க் குடிசை மாற்று வாரிய கட்டிடத்தில் புகார்கள் வந்ததும் எவ்வாறு உரிய நடவடிக்கை சட்டப்படி எடுக்கப்பட்டதோ, அதேபோல் திருவொற்றியூரில் குடிசை மாற்று வாரிய கட்டிடங்கள் இடிந்து விழுந்தது குறித்து தமிழக முதல்வர் அவர்கள் உரிய ஆய்வு மேற்கொண்டு, இந்த ஆய்வின் அடிப்படையில், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி இந்து சமய அறநிலையத்துறை பக்தர்களின் வசதிக்காக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனை பலர் பாராட்டினாலும்,  ஒரு சிலர் வேண்டுமென்றே ஆதாரமற்ற, பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள். போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும், எங்கள் கடமை மக்கள் பணி செய்வதே, என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழிகாட்டுதல்படி ஆதாரமற்ற பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுவோரை புறந்தள்ளி எங்கள் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறோம். கொரோனா நோய்த்தொற்று, தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்துவதில், தமிழகத்தில் இதுவரை 85 சதவீதம் பேர் முதல் தவணைத் தடுப்பூசியும், 45% பேர் இரண்டாம் தவணைத் தடுப்பூசியும் செலுத்தி கொண்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் கழகத் தலைவர் தளபதி அவர்கள் தலைமையிலான புதிய ஆட்சி அமையப்பெற்று, அதிகம் தடுப்பூசி செலுத்தியதில் இந்தியாவிலேயே முதல் மாநிலம் தமிழ்நாடு என்ற பெருமையையும் பெற்றுள்ளோம்.கொரோனா நோய் தொற்று கட்டுப்பாடுகளை கடைபிடிப்பதில், ஒன்றிய அரசு வழி காட்டும் நடைமுறைகளை மாநில அரசு கடைபிடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இருப்பினும் வருகின்ற புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு திருக்கோயில்களில் பக்தர்களை அனுமதிப்பது குறித்து தமிழக முதல்வர் அவர்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் கலந்து பேசி உரிய முடிவினை அறிவிப்பார். இவ்வாறு அவர் கூறினார் இந்த ஆய்வின்போது அரசு பல் மருத்துவக்கல்லூரி முதல்வர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பகுதி செயலாளர் முரளி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags : Minister ,Sakerbabu , Accident by substandard buildings; Chief Minister will take action against whoever is at fault: Minister Sekarbabu
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...