இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் நிலங்களை விற்பனை பரிவர்த்தனைகள் செய்ய தடை: ஆணையர் குமரகுருபரன் அதிரடி உத்தரவு

சென்னை: இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை விற்பனை செய்வதோ, நில பரிவர்த்தனைகள் மேற்கொள்ளவோ தடை விதித்து ஆணையர் குமரகுருபரன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான கோயில்களில் அன்றாட பூஜைகள் மற்றும் திருவிழாக்கள் நடத்திடவும், அவற்றை பராமரிக்கவும் மன்னர்கள் முதல் பக்தர்கள் வரை பல்வேறு காலகட்டங்களில் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை தானமாக வழங்கி வருகின்றனர். அந்த வகையில், தற்போது இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் 44 ஆயிரம் கோயில்கள் உள்ளன. இக்கோயில்களுக்கு சொந்தமாக 1 லட்சம் கட்டிடங்கள், 4.5 லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளது. இந்த நிலங்கள், கட்டிடங்கள் குத்தகை மற்றும் வாடகைக்கு விடப்பட்டு, அதன் மூலம் வருவாய் கிடைக்கிறது.

இந்த நிலையில், கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்கள் பல்வேறு அரசு துறைகளுக்கும், பொதுத்துறை நிறுவனங்களுக்கும் வாடகை மற்றும் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. ஆனால், சில நேரங்களில் கோயில் சொத்துக்களை, அரசு துறைகளுக்கு விற்பனை செய்யும் நடைமுறை இருந்தது. இந்த  நிலையில், கோயில் சொத்துக்களை அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிடம்  ஒப்படைக்கும் போது, சரியான மதிப்பை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும், இது  தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் அவற்றை செய்ய  வேண்டும். அப்போது தான் அறநிலையத்துறைக்கு எதிர்பார்த்த வருவாய் கிடைக்கும் என்று ஆணையர்  குமரகுருபரன் தெரிவித்து இருந்தார்.

ஆனால், கோயில்களை நிர்வகிப்போரால் சட்டப் பிரிவு வழிமுறைகளை பின்பற்றாமலும்,  கமிஷனரின் அனுமதி பெறாமலும் கோயில் நிலங்கள் விற்பனை, அடமானம், நீண்டகால  குத்தகை போன்ற செயல்கள் நடந்துள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன. இந்த வழக்கில் தானமாக வழங்கப்பட்ட சொத்துகளை விற்பதன் மூலம், அந்த சொத்து எதற்காக கொடுக்கப்பட்டதோ, அதன் பயனை அடைய முடியாமல் போய் விட்டதாக நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. இந்த நிலையில், அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்களை விற்பனை மற்றும் நில பரிவர்த்தனைகள் மேற்கொள்ள தடை விதித்து ஆணையர் குமரகுருபரன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது குறித்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: அறநிறுவனங்களுக்கு சொந்தமான நிலங்கள் விற்பனைக்கு வழங்குதல் மற்றும் நிலபரிவர்த்தனை செய்தல் கூடாது. ஏதேனும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பின் அவற்றின் மீது மேல் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: